புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் வேளையில் பிரச்சனையை தீர்ப்பதற்காக நேற்று கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆனால், ஹஸாரேவின் உடல்நிலை மோசமடைந்துள்ள சூழலில் அவர் உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்; ஜன லோக்பால் மசோதாவைப் பரிசீலனை செய்து, ஊழலை ஒழிக்க வலுவான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்; அதே சமயத்தில், சட்டம் இயற்றுவதில் நாடாளுமன்றத்துக்கு உள்ள மாட்சிமை காக்கப்பட வேண்டும் என்று பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
நிலைக்குழு பரிசீலனையில் ஜன லோக்பால் மசோதா: கூட்டத்தையடுத்து, ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அரசு அனுப்பி வைத்தது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “ஹஸாரேவின் போராட்டம், நாடாளுமன்ற மாட்சிமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தொடர் உண்ணாவிரதம் காரணமாக, ஹஸாரேவின் உடல்நிலை கவலையளிப்பதாக உள்ளது.
எனவேதான், இப்பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைகளை அறிந்து கொள்ள இக்கூட்டத்தைக் கூட்ட நானே முன் முயற்சி எடுத்தேன்” என்றார்.
நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்காமல், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஜன லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஹஸாரே குழுவினர் விதித்துள்ள கெடு குறித்து (கூட்டத்துக்குப் பிறகு) இப்தார் விருந்தின் போது நிரூபர்கள் கேட்டதற்கு “அது அவர்களின் கோரிக்கை. அவர்கள் கேட்பதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடாது” என்று பிரதமர் கூறினார்.
ஹஸாரேவின் போராட்டம் மத்திய அரசை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், இப்பிரச்னைக்கு நடைமுறைக்கு உகந்த தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
இதனிடையில், ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ஹஸாரே “உயிர் போனாலும் கவலையில்லை. ஊழல் ஒழிய வேண்டும். எனது கோரிக்கை நிறைவேறும் வரையில் உண்ணாவிரதத்தைத் கைவிட முடியாது” என முரண்டு பிடித்தார்.
ஜன லோக்பால் மசோதாவை இயற்ற வேண்டும் என்று கோரி ஹஸாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹசாரே குழுவுக்கும், அரசுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடந்தது.
அரசுத் தரப்பில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், ஹஸாரே குழுவின் தரப்பில் அரவிந்த் கேஜ்ரிவால், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிருபர்களிடம் பேசிய குர்ஷித் “லோக்பால் மசோதா நிறைவேற 20 நாள்களாகும். அதனால், ஹஸாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும்” என்றார்.
லோக்பால் மசோதாவை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு, ஹஸாரே குழுவினரின் ஜனலோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் உடனடியாக ஹஸாரே போராட்டத்தை முடித்துக்கொள்வார் என அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹஸாரேவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு பொறுப்பு மத்திய அரசு மட்டுமே என கேஜ்ரிவால் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment