Monday, August 1, 2011

முடிவுக்கு வந்தது நாடகம்: எடியூரப்பா ராஜினாமா

 
yedi2223பெங்களூர்:பல்வேறு நாடக காட்சிகள் அரங்கேறி இறுதியில் சட்டவிரோத சுரங்கத்தொழில் ஊழலில் சிக்கிய பா.ஜ.கவின் தென்னிந்திய ஹீரோ எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த மூன்று தினங்களாக பா.ஜ.கவின் தலைமையை குழப்பத்தில் ஆழ்த்தி தீர்மானம் எடுக்காமல் காலம் கடத்திவந்த எடியூரப்பா நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய முதல்வர் நியமனம்
ஆகும்வரை காபந்து முதல்வராக தொடர கேட்டுக்கொண்டார்.


தன்னை ஆதரிக்கும் 60 எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் கால்நடையாக நடந்து சென்ற எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

சட்டவிரோத சுரங்கத்தொழிலில் முதல்வருக்கு பங்குண்டு என கர்நாடகா மாநில லோகாயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கையை தொடர்ந்து பதவி விலக எடியூரப்பாவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எடியூரப்பா பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பதவி விலக தனக்கு தயக்கமில்லை எனவும், கட்டுப்பாடுடையை கட்சி தொண்டன் என்ற வகையில் தலைமையின் தீர்மானத்தை அங்கீகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில், லோகாயுக்தா அறிக்கையில் தன்னை குற்றவாளியாக்கியது அநியாயமான நடவடிக்கை என எடியூரப்பா தெரிவித்தார்.

லோகாயுக்தா அறிக்கை வெளியானது முதல் ராஜினாமா செய்யக்கோரிய பா.ஜ.க தலைமையை பதட்டத்தின் முள்முனையில் நிறுத்திய பிறகே பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா.பதவி விலகவேண்டுமென்றால் அதற்கு பதிலாக டி.வி.சதானந்த கவுடாவை முதல்வராக்கவேண்டும் எனவும், கட்சியின் தலைமை பொறுப்பை தனக்கு அளிக்கவேண்டும் எனவும் எடியூரப்பா கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த கோரிக்கைகளுடன் தனது தூதர்களை பா.ஜ.க மத்திய கண்காணிப்பாளர்களான அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அனுப்பியபொழுதும், ஐந்து மணிக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கட்சியிலிருந்து வெளியேற்றுவோம் என பதில் கிடைத்தது.

மூத்த பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானியும் சுஷ்மா சுவராஜும் எடியூரப்பா ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கருதப்படுகிறது.

கட்சி தலைவர் நிதின்கட்கரிக்கு எடியூரப்பா காலையிலேயே ராஜினாமா கடிதத்தை ஃபேக்ஸ் செய்திருந்தார். அதேவேளையில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தாலும், இதுவரை புதிய முதல்வர் குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்றன. புதிய முதல்வரை வருகிற புதன்கிழமை அறிவிக்கப்போவதாக கர்நாடாக மாநில பொறுப்பை வகிக்கும் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

புதிய முதல்வர் பதவி ஏற்றாலும் கர்நாடாகாவில் பிரச்சனைகள் தீராது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சட்டவிரோத சுரங்கத்தொழில் குறித்த லோகாயுக்தா அறிக்கையை நடைமுறைப்படுத்துதல், அறிக்கையில் குற்றம்
சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களை நீக்குதல் உள்பட ஏராளமான நெருக்கடிகள் அடுத்த முதல்வரை காத்திருக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza