Monday, July 11, 2011

வேட்பு மனு விண்ணப்பத்தை ஒருதலைபட்சமாக தேர்தல் பொறுப்பு அதிகாரி தள்ளுபடி செய்யக்கூடாது-உச்ச நீதிமன்றம் உத்தரவு

nomination-july-10-2011-sl
புதுடெல்லி:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தாக்கல் செய்யும் வேட்பு மனுவை போதிய கூர்ந்தாய்வோ, காரணமோ இன்றி ஒருதலைபட்சமாக தேர்தல் பொறுப்பு அதிகாரி (returning officer) தள்ளுபடி செய்யகூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு எதிராக  கடுமையான விளைவுகளை உருவாக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

வேட்பாளர் மனுத்தாக்கல் செய்யும் பொழுது அதனை ஏற்றுக்கொண்டு தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது தேர்தல் பொறுப்பு அதிகாரியின் கடமையாகும். வேட்பாளர்கள் தவறுகளை திருத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். வேட்பு மனுவில் தவறுகளை திருத்தாவிட்டால் மட்டுமே அதனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் வேறொரு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கு எதிராக கேள்வி எழுப்பி கர்நாடகா மாநில எம்.எல்.ஏ நந்தியேஷ் ரெட்டி அளித்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டு நீதிபதிகளான ஹெச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

2008-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கே.ஆர்.புரா சட்டமன்ற தொகுதியில் நந்தியேஷ் ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட கவிதா மகேஷ் என்பவரின் வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பு அதிகாரி தள்ளுபடி செய்திருந்தார். இதனை எதிர்த்து கவிதா கர்நாடகா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து நந்தியேஷ் ரெட்டி அளித்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கவிதாவின் வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பு அதிகாரி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து நந்தியேஷ் ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza