புதுடெல்லி:உ.பி மாநிலத்தில் நேற்று நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து அஸ்ஸாமிலும் ரெயில் விபத்து நிகழ்ந்துள்ளது. ஜகன்னாதபூரி-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியதில் 50 பயணிகள் காயமடைந்தனர்.தண்டவாளத்தில் குண்டு வெடித்ததால் ரெயில் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குண்டு வெடிப்பு குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. அஸ்ஸாமில் காம்ரூப் மாவட்டத்தில் ரங்கியா-காக்ராபூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாத்குச்சி என்ற இடத்தில் சென்றபோது இரவு 9.00 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகளும் மீட்புப்படையினரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடம் புறநகர்ப் பகுதியாக இருந்ததால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக வட கிழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த போது பயங்கர சப்தம் கேட்டதாக ரயில் பயணிகளும், உள்ளூர் மக்களும் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment