பத்ஹ்பூர் (உ.பி):கான்பூருக்கு அருகே ஹவ்ரா-டெல்லி கல்கா ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதில் 40 பேர் மரணமடைந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான ரெயில் விபத்து இதுவாகும்.
நேற்று கொல்கத்தாவின் ஹவ்ரா ஸ்டேசனிலிருந்து ஏராளமான பயணிகளை ஏற்றிச்சென்ற சூப்பர் பாஸ்ட் ரெயில் மல்வா ஸ்டேசனுக்கு அருகில் மதியம் 12.20 மணியளவில் விபத்தில் சிக்கியது. ரெயிலின் முதல் 15 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்து நொறுங்கின. இதில் 10 ரயில் பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் நொறுங்கின. எஞ்சினுக்கு அருகிலுள்ள பொது கம்பார்ட்மெண்டில் பயணித்த பயணிகள் தாம் மரணித்தவர்களில் பெரும்பாலோர் ஆவர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
கல்கா மெயில் அதிகபட்ச வேகமான 108 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது தான் விபத்துக்கான காரணம் என கருதப்படுகிறது. ரெயிலில் எமர்ஜென்சி ப்ரேக்கை உபயோகித்தது விபத்துக்காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து வடக்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் எச்.சி.ஜோஷி கூறுகையில், விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
விபத்து குறித்து பதேபூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராம்பரோஸ் கூறுகையில், இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். நொறுங்கிய 15 பெட்டிகளில் 2 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதில் சிக்கியவர்களை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. அப்பெட்டிகள் துண்டிக்கப்பட்டு மீட்புப்பணி நடந்து வருகிறது.
என்ஜினுக்குப் பின்னால் இருந்த பயணிகள் பொதுப்பெட்டி மிகவும் மோசமான நிலையில் நொறுங்கியுள்ளது. அவற்றில் பல பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனால் “கேஸ் கட்டர்’ இயந்திரம் கொண்டுவரப்பட்டு அப்பெட்டியைத் துண்டித்து உள்ளே சிக்கியிருக்கும் பயணிகளை மீட்க முயற்சி நடக்கிறது என்றார் எஸ்பி ராம்பரோஸ்.
விபத்து குறித்து ரயில்வே இணை அமைச்சர் முகுல்ராய் கூறியதாவது:விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் மீட்புப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மீட்புப்பணியில் ஈடுபட அலகாபாத் மற்றும் கான்பூரிலிருந்து 120 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் பயணிகள் பற்றிய தகவலை அறிய ஹவுரா மற்றும் தில்லியில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதுபோல் தேசிய பேரிடர் மீட்புப்படையும் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் மற்றும் கான்பூரில் இருந்து தலா ஒரு மீட்பு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கல்கா ரயில் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், அதில் பயணம் செய்தோரின் உறவினர்கள், நண்பர்கள் அலறியடித்தபடி ஹவுரா மற்றும் கான்பூர் ரயில் நிலையங்களில் திரண்டனர். அவர்கள் விபத்தைப் பற்றி அறிந்ததும் கதறி அழுதனர். அவர்களது உறவினர்கள் நிலை என்பது குறித்து அவர்களால் உடனடியாக அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். இதையடுத்து ஹவுராவில் கூடிய உறவினர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில் ஒன்றை மால்வாவுக்கு கிழக்கு ரயில்வே இயக்கியது.
இந்த விபத்தால் அலகாபாத்-கான்பூர் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரெயில் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment