அங்காரா:துருக்கியின் ராணுவ தலைமை தளபதியான இஸ்ஹாக் கொஸானர் ராஜினாமா செய்த சூழலில் ஜெனரல் நஜ்தத் ஒஸல் புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
அதிபர் அப்துல்லாஹ் குல் நஜ்தத்தை தளபதியாக நியமிப்பதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளார். இதுத் தொடர்பாக காரியங்களை விவாதிப்பதற்கு அப்துல்லாஹ் குல்லும் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும் சந்திப்பை நடத்தினர்.
ராணுவத்திற்கும், ஏ.கே.கட்சிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து கொஸானர் ராஜினாமா செய்தார். கடற்படை, தடைப்படை, விமானப்படை தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாட்டை களைவதற்கு எர்துகானும், கொஸானரும் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் பலன் ஏற்படவில்லை. ஏ.கே.கட்சி அரசை கவிழ்க்க ராணுவ தலைவர்கள் முயற்சித்தார்கள் என கண்டறிந்த உச்சநீதிமன்றம் 22 ராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டிய உடனேயே ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
அரசுக்கு எதிராக ராணுவ தலைவர்கள் இணையதளத்தில் பிரச்சாரம் நடத்தியதாக கண்டறியப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டு ராணுவ கருத்தரங்கில் அரசை கவிழ்ப்பது தொடர்பான திட்டத்தை ராணுவ தலைவர்கள் தயாரித்தனர். இருநூறு ராணுவ அதிகாரிகள் மீது சதித்திட்டம் தீட்டிய குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. 28 ராணுவத்தினரின் விசாரணை அடுத்தமாதம் துவங்கும். மஸ்ஜிதுகளில் குண்டுவைக்கவும், கிரிஸுடன் மோதல் சூழலை அதிகரிக்கச் செய்யவும் ராணுவம் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ராணுவத்தினரின் ராஜினாமா நாட்டின் பாதுகாப்பை பாதிக்காது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், வருடாந்திர பதவி உயர்வு நடத்தப்படவேண்டும் என மூத்த ராணுவ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தபோதிலும் அரசு மறுத்துவருகிறது. அடுத்தவாரம் பதவி உயர்வு தொடர்பாக உயர் ராணுவ கவுன்சில் தீர்மானம் எடுக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment