திரிபோலி:அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறோம் என கூறி லிபியாவில் விமானத்தாக்குதலை துவக்கிய நேட்டோ அந்நாட்டில் குண்டுகளை வீசி கோரத்தாண்டவம் ஆடுகிறது. லிபியாவின் தலைநகரமான திரிபோலியில் பெரும் நாசத்தை விளைவிக்கும் குண்டுகளை நேட்டோ வீசியுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் இயங்கும் ஹோட்டலில் நான்கு குண்டுகள் வீசப்பட்டன. நகரத்தின் இன்னொரு பகுதியில் ஐந்தாவது குண்டுவீசப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பாபுல் அஸீஸாவில் கத்தாஃபியின் தலைமையகத்தின் மீதும் நேட்டோ குண்டுகளை வீசியது. நேற்று அதிகாலை நடந்த தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகளை குறித்து விபரம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் எதிர்ப்பாளர்களுடன் கத்தாஃபியை பதவியிலிருந்து விலக்குவது குறித்து கூடுதல் பேச்சுவார்த்தைகளை நடத்த லிபியாவின் அரசு பிரதிநிதிகள் தயாரானதாக செய்திகள் கூறுகின்றன. இறுதி வரை எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன் என கத்தாஃபி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இவ்வேளையில் அரசு பிரதிநிதியின் பேச்சுவார்த்தை குறித்து வாக்குறுதி வெளியாகியுள்ளது. எதிர்ப்பாளர்களின் கவுன்சிலை அதிகாரப்பூர்வ அரசாக அமெரிக்கா கடந்த வாரம் அங்கீகரித்திருந்தது. இச்சூழலில் லிபியாவின் அரசு பிரதிநிதி மூஸா இப்ராஹீம் புதிய பேச்சுவார்த்தை தேவை என கூறியுள்ளார்.
தொடர் பேச்சுவார்த்தைகள் லிபியாவின் பிரச்சனைக்கு பரிகாரம் காண உதவும். பேச்சுவார்த்தையில் கத்தாஃபி நேரடியாக பங்கேற்கமாட்டார். ஆயுதம் ஏந்தியவர்கள் தாக்குதலை நிறுத்தவேண்டும் என மூஸா இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment