டேராடூன்:ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குருவும், ஹைடெக் உண்ணாவிரத பேர்வழியுமான பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் கல்வி சான்றிதழ்கள் போலி என சி.பி.ஐ கண்டறிந்ததை தொடர்ந்து அவர் மாயமானார்.
பாலகிருஷ்ணாவின் பாதுகாப்பு அதிகாரி ஜெயேந்திரசிங் அஸ்வால் காங்கல் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
நேற்று முன் தினம் பாலகிருஷ்ணாவுடன் பதஞ்சலி யோகா பீடத்திற்கு செல்வதற்காக அவருடைய திவ்யயோக் ஆசிரமத்திற்கு சென்ற அஸ்வாலிடம் தான் தனியாக வருவதாக கூறி அனுப்பியுள்ளார் பாலகிருஷ்ணா. ஆனால், மாலைவரை பாலகிருஷ்ணாவை காத்திருந்த அஸ்வால் மீண்டு அவரை காண்பதற்காக திவ்யயோக் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பாலகிருஷ்ணாவை காணவில்லை என அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ளவர்களை போலீஸ் விசாரித்தது. ஆனால் பாலகிருஷ்ணாவைக் குறித்து தகவல் கிடைக்கவில்லை. அத்தியாவசியமாக ஏதேனும் காரியங்களுக்காக வெளியே சென்றால் பாலகிருஷ்ணா உடனடியாக திரும்பிவிடுவார் என ஆசிரமத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
போலி சான்றிதழ்களை தயார்செய்த பாலகிருஷ்ணா மீது க்ரிமினல் சதித்திட்டம், மோசடி ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அவரைக் குறித்த தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. பாலகிருஷ்ணா வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக கூறும் சி.பி.ஐ விமானநிலையம், ரெயில்வே ஸ்டேஷன், பஸ்நிலையம் ஆகியவற்றில் தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹரித்துவாரில் ராம்தேவின் குருவான சங்கர்தேவ் காணாமல் போனது குறித்து விசாரணையை துவக்கியதாக ஹரித்துவார் போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment