காந்தஹார்:ஆப்கானிஸ்தானில் மீண்டும் நடந்த தாலிபான் தாக்குதலில் மேயர் கொல்லப்பட்டார். தெற்கு ஆப்கானில் மிகவும் பிரபலமான நகரமான காந்தஹாரின் மேயரான குலாம் ஹைதர் ஹமீதி மரணித்துள்ளார்.
வீட்டில் உள்ளூர்வாசிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் தலைப்பாகையில் வெடிக்குண்டை ஒளித்து வைத்திருந்த நபர் பெரும் சப்தத்துடன் வெடித்து சிதறியதாக போலீஸ் தலைவர் அப்துற்றாஷிக் கூறுகிறார்.
லுயவாலா பகுதியில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்களை சட்டத்திற்கு புறம்பாக நிர்மாணித்ததாக குற்றம் சாட்டி அதனை இடித்துத்தள்ள மேயர் உத்தரவிட்டுள்ளார். கட்டிடங்களை இடிக்கும் வேளையில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதுத் தொடர்பாக கிராமவாசிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும்பொழுது மேயர் கொல்லப்பட்டுள்ளார்.
அதிபர் ஹமீத் கர்ஸாயியின் ஒன்றுவிட்ட சகோதரனும், அவருடைய வலதுகரமாக செயல்பட்ட அஹ்மத் வாலி கர்ஸாயி இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
கர்ஸாயியின் உறவினர்களுடைய நாடான காந்தஹார் தாலிபானின் தீவிர ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டுவரை தாலிபான் காந்தஹாரை மையமாக வைத்துதான் ஆட்சிபுரிந்தது. நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவந்த ஹைதர் ஹமீதி கர்ஸாயியின் கட்டளையின்படி 2006-ஆம் ஆண்டு மேயர் பதவியை ஏற்றார். 2009-ஆம் ஆண்டு ஹைதரை குறிவைத்து தாக்குதல் நடந்தபொழுதும் அவருடன் இருந்த இரண்டு துணை மேயர்கள் கொலல்ப்பட்டனர். கடந்த ஆண்டும் இவர் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மாகாண போலீஸ் தலைவர் கொல்லப்பட்டார்.
அஹ்மத் வாலியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் காந்தஹாரில் பாதுகாப்பை வலுப்படித்தியுள்ள சூழலில்தான் இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையே, கட்டிடங்களை இடிக்கும்பொழுது தங்களின் இரு குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் என தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அஹ்மத் வாலியின் கொலைக்கு முன்னர் கர்ஸாயியின் நெருங்கிய உதவியாளர் முஹம்மது கானை காபூலில் அவருடைய வீட்டில் வைத்து தாலிபான் சுட்டுக்கொன்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment