புதுடெல்லி:சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் கெ.டி.எஸ்.துளசி வழக்கை வாதாடுவதிலிருந்து விலகியுள்ளார்.
சி.பி.ஐக்காக வாதாடுவதில் இருந்து சுயமாக விலக உச்சநீதிமன்றம் கோரியதைத் தொடர்ந்து துளசி விலகியுள்ளார்.
முன்னர் இவ்வழக்கில் குஜராத் அரசிற்காக துளசி ஆஜரானார் என்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் துளசியிடம் வழக்கை வாதாடுவதில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து துளசி வழக்கை வாதாடுவதிலிருந்து சுயமாக விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிக்கவைக்க சி.பி.ஐ சாட்சிகளை கைவசப்படுத்த முயலும் ரகசிய கேமரா காட்சிகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எதிர்தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிமன்றம் முன்பாக நம்பிக்கைக்குரிய ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் வேளையில் ஏன் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் தேவை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சொஹ்ரபுத்தீன் ஷேக்கின் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சதிகாரன் அமீத் ஷா என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment