கெய்ரோ:சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தக்கோரி எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவருடைய அதிகாரிகளின் குற்ற விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பேரணியில் கலந்துக்கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
வியாழக்கிழமை இரவே மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டனர். மோதல்களை தவிர்க்க போக்குவரத்து கட்டுப்பாட்டை மக்களே ஏற்றுக்கொண்டனர். போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தஹ்ரீர் சதுக்கத்தின் அருகில் குவிக்கப்பட்ட போதிலும் உள்ளே அவர்கள் நுழையவில்லை.
எகிப்தின் மிகப்பெரிய வலுவான எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் இப்போராட்டத்தில் பங்கேற்றது. லட்சக்கணக்கானோர் திரளும் பேரணி என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டம் கடந்த பெப்ருவரி 11-ஆம் தேதி முபாரக் ராஜினாமா செய்தபிறகு எகிப்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாகும் என அல்ஜஸீரா கூறுகிறது. சூயஸ், அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
17 எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் கடந்த வாரம் 7 போலீசாரை விடுதலை செய்தது தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் திரள காரணமானது. ஜனவரி மாதம் துவங்கி முபாரக்கின் ராஜினாமாவில் முடிவடைந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 846 பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் காயமடைந்தனர்.
பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நடவடிக்கையில் மூன்று அமைச்சர்களை நேற்று முன்தினம் நீதிமன்றம் விடுவித்த நடவடிக்கையும் போராட்டத்திற்கு காரணமானது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது முபாரக் ஆதரவு போலீஸ்காரர்களின் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட போலீஸ்காரர்களில் ஒருவர் மட்டுமே இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment