பெங்களூர்:பல ஆயிரம் கோடி சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார். அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது.
நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார். அவருடன், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட சிலர் மட்டுமே வந்தனர்.
பெங்களூரில் தன் இல்லத்தில், பா.ஜ., தலைவர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எடியூரப்பா வீட்டில் நடந்த கூட்டத்தில், 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில், ஏழு அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.,க்களும் அடங்குவர். எடியூரப்பா நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அமைச்சர்கள் ஷாபா, ரேணுகாச்சார்யா, உதாசி, உமேஷ் கட்டி, பசவராஜ் பொம்மை மற்றும் ஜீவராஜ், கட்டா சுப்பிரமணிய நாயுடு, யோகேஷ் பட், சந்திரகாந்த் பெல்லட், வால்மீகி நாயக், ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, “முதல்வர் வீடு மற்றும் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறுங்கள்” என்று, டில்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.
முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டதையடுத்து, எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த பலரும், அவரை கைகழுவியதாக தெரிகிறது. இதுவரை எடியூரப்பாவை எதிர்த்து வந்த ரெட்டி சகோதரர்களும், பெல்லாரி எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்டம் காட்ட முயற்சித்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் பாஜக தலைவர் கட்காரிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் அவர் பதவி விலகவுள்ளதாக பின்னர் தெரிய வந்தது. இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதாவது, தனக்குப் பின்னர் சதானந்த கெளடா எம்.பியை முதல்வராக்க வேண்டும், தான் சொல்லும் நபர்களையே அமைச்சர்களாக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு நிபந்தனை போட்டுள்ளாராம் எடியூரப்பா. இவை நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்த்த பின்னர் பதவியிலிருந்து விலகுவது என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று புதிய சட்டமன்ற பாஜக தலைவரை பாஜக தேர்வு செய்கிறது. இதற்காக மேலிடத் தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பெங்களூர் வருகின்றனர். அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்து புதிய முதல்வர் குறித்து ஆலோசித்து தேர்வு செய்வர்.
தற்போதைய நிலவரப்படி உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா, அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment