புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி விண்ணப்பம் அளிக்கும் மனுதாரர்களை மிரட்டுபவர்களுக்கு தகவல் உரிமை கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய மிரட்டல் வேலைகளில் ஈடுபடுவோரை தண்டிக்க அரசின் அனைத்து கட்டமைப்புகளையும் கமிஷன் பயன்படுத்தும் என தகவல் உரிமை கமிஷனர் ஷைலேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
ரேசன் கார்டிற்காக இரண்டு வருடம் காத்திருந்த பிறகு பலனில்லாமல் வந்த வயோதிக பெண்மணியின் புகாரை தொடர்ந்து கமிஷன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வறுமையில் வாடும் துர்கா என்ற வயோதிக பெண்மணி ரேசன் கார்டிற்காக டெல்லி அரசு அலுவலகத்தில் இரண்டு வருடங்களாக அலைந்துள்ளார். தனது மனுவின் நிலையைக் குறித்து அறிய அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மனு கொடுத்துள்ளார். ஆனால், இம்மனுவிற்கு பதிலளிக்காததுடன் அவருடைய வீட்டிற்கு சென்று கண்காணிப்பு குழு உறுப்பினர் மிரட்டியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு துர்கா ரேசன் கார்டிற்காக மனு அளித்துள்ளார். ஆனால் இரண்டுவருடங்களுக்கு பிறகு ரேசன் கார்டு கிடைக்காததால் மீண்டும் மனு அளிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பின்னர் அவர் மனுவை அளித்தபிறகும் ரேசன் கார்டின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரேசன் கார்டு வழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறுமையில் வாடுவோருக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்கவில்லை எனில் அரசின் வாக்குறுதிகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என ஷைலேஷ் காந்தி சுட்டிக்காட்டினார். மனு அளித்த வயோதிக பெண்மணிக்கு 3000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட கமிஷன் பொது தகவல் உரிமை அதிகாரி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் புகார் அளித்த பெண்மணிக்கு பி.பி.எல் ரேசன் கார்டு வழங்கவேண்டும் என உத்தரவிட்ட கமிஷன் இக்காரியத்தை பரிசோதித்து தகவலை அளிக்க உணவு கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment