மொகாதிஷு:கடந்த 60 வருடங்களாக ஆப்பிரிக்காவில் தொடரும் வறட்சி சோமாலியாவில் இரண்டு முக்கிய பிரதேசங்களை கொடும் பட்டினியால் வாடும் பகுதிகளாக மாற்றியதாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.நா மனிதவள துறையின் ஒருங்கிணைப்பாளர் மார்க் பவ்டன் சோமாலியாவின் பாகுல், லோவர் ஷாபல்லெ ஆகிய பிரதேசங்கள் பட்டினியால் வாடுவதாக அறிவித்துள்ளார்.
அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பட்டினி நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க இயலாதது கவலைக்குரியது என மார்க் பவ்டன் தெரிவித்துள்ளார்.
பட்டினியால் வாடுவோருக்கு உணவுப்பொருட்களை கொண்டுசெல்ல உதவி தேவை என ஐ.நா துயர்துடைப்பு ஏஜன்சி போராளி அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சி மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 1.10 கோடி மக்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மோதல்களால் துயருறும் சோமாலியாதான் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டினியின் காரணமாக பத்தில் ஒரு குழந்தை வீதம் மரணிப்பதாக ரெட்க்ராஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதை தவிர மக்கள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுறுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment