புதுடெல்லி :வாக்களிக்க பணம் அளித்த வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான அமர்சிங்கிடம் விசாரணை நடத்த மாநிலங்களை தலைவரான துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்ஸாரி அனுமதியளித்துள்ளார்.
லஞ்சமாக வழங்கப்பட்ட பணத்தை பாராளுமன்றத்தில் பார்வைக்கு வைத்த மூன்று பா.ஜ.க எம்.பிக்களையும், எல்.கே.அத்வானியின் முன்னாள் ஆலோசகர் சுதீந்திர குல்கர்ணியையும் விசாரிக்க டெல்லி போலீஸ் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
லஞ்சப்பணம் வாக்குறுதியளித்ததை ரகசிய கேமராவில் பதிவு செய்ய தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு கட்டளையிட்டது குல்கர்ணியாவார். ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பரிசோதித்த பிறகு விசாரணை குழுவினர் குல்கர்ணியை விசாரிக்க தீர்மானித்தனர்.
எம்.பிக்களுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் குல்கர்ணியின் பங்கினையும் விசாரிக்க வேண்டும் என இச்சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய கிஷோர் சந்திர தேவை தலைவராக கொண்ட பாராளுமன்ற குழுவும் வலியுறுத்தியிருந்தது.
வாக்களிக்க லஞ்சம் வழங்கிய வழக்கில் கைதான சஞ்சீவ் சக்ஸேனாவின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அமர்சிங்கிடம் விசாரணை நடத்துவதற்கு நேற்று முன்தினம் டெல்லி போலீஸ் துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்ஸாரியிடம் அனுமதி கோரியது.
அமர்சிங்கையும், பா.ஜ.க எம்.பி அசோக் அகர்வாலையும் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகமும் டெல்லி போலீஸிற்கு அனுமதி வழங்கியுள்ளது. எம்.பிக்கள் என்பதால் மாநிலங்களை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகரின் அனுமதி பெறவேண்டும். இதன் அடிப்படையில் மக்களை உறுப்பினரான அசோக் அகர்வாலிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் மக்களை சபாநாயகர் மீராகுமாரிடம் அனுமதி பெற்றுள்ளது. மேலும் லஞ்சப் பணத்தை பாராளுமன்றத்தில் பார்வைக்கு வைத்த பா.ஜ.கவின் முன்னாள் எம்.பிக்கள் பாகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோரிடமும் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தும்.
2008 ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பா.ஜ.க எம்.பிக்களை விலைக்கு வாங்க தன்னை நியமித்தது அமர்சிங் ஆவார் என அவருடைய முன்னாள் உதவியாளர் சஞ்சீவ் சக்ஸேனா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து இடதுசாரிகள் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வேளையில் பகிரங்கமாக பா.ஜ.க எம்.பிக்களாக இருந்த அசோக் அகர்வால், பாகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோர் லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் என்று கூறி ரூபாய் நோட்டுக்கட்டுக்களை பாராளுமன்ற அவையில் பார்வைக்கு வைத்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment