லண்டன்:சர்வதேச ஊடக முதலை ரூபர்ட் மர்டோக்கின் நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகைக்கு பரபரப்பான செய்திகளுக்காக பிரபலங்கள் உள்பட ஏராளமானோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட வழக்கை சரியான முறையில் விசாரணை நடத்துவதில் அரசுகள் தோல்வியடைந்ததாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
ரூபர்ட் மர்டோக்கிற்கு சொந்தமான நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகை நடத்திய தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து அப்பத்திரிகை இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சனையை குறித்து அழைப்பு விடுக்கப்பட்ட பாராளுமன்ற அவசரக்கூட்டத்தில் விளக்கம் அளித்தார் டேவிட் காமரூன்.அதேவேளையில் நியூஸ் ஆஃப் த வேர்ல்டிற்கு எதிரான லஞ்சம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்குகளின் விசாரணையை முறியடிக்க தனது அதிகாரிகள் தலையிடவில்லை என காமரூன் தெரிவித்தார்.
இப்பத்திரிகையின் முன்னாள் எடிட்டர் ஆண்டி கூல்ஸனை பத்திரிகை செயலாளராக நியமித்தது விவாதத்தை கிளப்பியதையடுத்து அவர் இந்த விளக்கத்தை அளித்தார். வழக்கு தொடர்பாக பின்னர் கைதுச் செய்யப்பட்ட கூல்ஸன் பத்திரிகையிலிருந்து ராஜினாமா செய்தபிறகு காமரூனுடன் சந்திப்பை நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்துவிட்டு காமரூன் பாராளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேவேளையில், கூல்ஸனை பத்திரிகை செயலாளராக நியமித்ததற்கு தான் வருந்துவதாக காமரூன் தெரிவித்தார்.
இதற்கிடையே பிரிட்டனை உலுக்கிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவாதத்தைக் குறித்து விசாரணை நடத்த ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திர குழுவை நியமிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் ஷாமி சக்ரவர்த்தியும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment