புதுடெல்லி:தீவிரவாதத்தை இணைந்து எதிர்கொள்ளவும், கஷ்மீர் விவகாரத்தில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா-பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இத்தீர்மானங்களை வெளியிட்டனர்.
தீவிரவாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரேபோல பிரச்சனை என கிருஷ்ணா கூறினார். அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய யுகம் பிறந்துள்ளதாக ஹினா ரப்பானி தெரிவித்தார்.
நேற்று முன் தினம் டெல்லிக்கு வருகைத்தந்த பொழுதை விட தற்பொழுது எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்திலும் சரியான தீர்வு வேண்டும். இதற்காக இனியும் பேச்சுவார்த்தையை தொடருவோம் என ஹினா ரப்பானி தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் மீண்டு பேச்சுவார்த்தை நடத்துவர்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முக்கியமாகப் பேசினர். இந்த விஷயத்தில் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். விஷயத்தை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, நம்பிக்கையூட்டும் வகையில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர்-பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் கஷ்மீர் இடையேயான வர்த்தக தொடர்பு தாராளமாக்கப்படும். வர்த்தகம் செய்யும் பொருட்களின் பட்டியலை செயற்குழு பரிசோதித்து அனுமதி அளிக்கும். வர்த்தகத்தின் கால அளவு வாரத்தில் இரண்டு முதல் நான்கு தினங்களாக அதிகரிக்கப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் ஸ்ரீநகர்-முஷாராபாத், பூஞ்ச்-ராவல்கோட் வழிகளில் ட்ரக் போக்குவரத்தை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர், தீவிரவாதம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை, கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட மனிதநேய பிரச்சனைகள், வர்த்தக-பொருளாதார ஒத்துழைப்பு, ஸர்க்ரீக், சியாச்சின், அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஹினா ரப்பானி டெல்லியில் ஹுர்ரியத் தலைவர்கள் செய்யத் அலிஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் ஆகியோருடனும், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment