சென்னை:ராணுவ குடியிருப்பில் நுழைந்து பழம் பறித்த சிறுவன் தில்ஷான் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஓய்வுப்பெற்ற லெஃப்டினண்ட் கர்னலை சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீசார் சனிக்கிழமை இரவில் கைது செய்தனர். ஓய்வு பெற்ற லெப்டினண்ட் கர்னல் ராமராஜன் என்பவர் தாம் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை சுட்டுக்கொன்றதை இவர் ஒப்புக்கொண்டதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறுவனை சுட்டுக்கொல்ல உபயோகித்த துப்பாக்கியை இவர் அளித்த தகவலின் அடிப்படையில் கூவம் நதியிலிருந்து கைப்பற்றப்பட்டது. சென்னை தீவுத்திடலுக்கு அருகே உள்ள ராணுவ குடியிருப்பிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் பழம் பறிக்க சென்ற தில்ஷான்(வயது 13) என்ற சிறுவன் ராணுவத்தை சார்ந்த நபரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டான்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. காரில் வந்த ராணுவ வீரர் தில்ஷானை சுட்டுக்கொன்றதாக அவனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ராணுவத்தின் துப்பாக்கியை உபயோகித்து சிறுவனை சுட்டுக்கொல்லவில்லை எனவும், ராணுவ குடியிருப்பில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி அளிப்பதில்லை எனவும் ராணுவம் தெரிவித்திருந்தது.
சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்படுத்திய ஆதாரங்களை பரிசோதித்த பிறகு ராணுவம் குற்றவாளியை ஒப்படைத்தது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் ரைஃபிளால் சுடப்பட்டு சிறுவன் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment