லண்டன்:ஒன்றரை நூற்றாண்டிற்கும் மேலாக பல்வேறு வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த பிரிட்டனில் பிரபல டாப்லாய்ட் பத்திரிகையான ’நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ முடிவுக்கு வந்தது. பத்திரிகையின் 75 லட்சம் வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்தும், சர்ச்சைக்குரிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் இப்பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தனது இறுதி பதிப்பை வெளியிட்டது.
இப்பத்திரிகை கடந்த 168 ஆண்டுகளாக வெளியிட்ட சிறப்பு செய்திகளின் தொகுப்பு படங்களாக இடம்பெற்றிருந்தன. 168 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் முக்கால் கோடி வாசகர்களிடம் துக்கத்துடனும், ஆனால் அபிமானத்துடனும் விடைப்பெறுகிறோம் என அப்பத்திரிகை கூறியது. விடை பெறும் வார்த்தையாக ’தாங்க்யூ & குட்பை’ பத்திரிகையின் முன் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
பரபரப்பு செய்திகளுக்காக இளவரசர் வில்லியம் உள்பட பல பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களையும், எஸ்.எம்.எஸ் என்ற குறுந்தகவல்களையும் ஒட்டுக்கேட்டதற்கு இப்பத்திரிகையின் முன்னாள் எடிட்டர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பிரிட்டனில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பத்திரிகை பத்திரிகை உலகின் ஜாம்பவான் என கருதப்படும் ரூபர்ட் மர்டோக்கிற்கு சொந்தமானதாகும்.
கடந்த ஏப்ரல் மாத புள்ளிவிபரப்படி நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் 26 லட்சம் பிரதிகள் வெளியாகின. பத்திரிகை மூடப்பட்டாலும் மர்டோக்கிற்கு நஷ்டம் ஏற்படாது என கருதப்படுகிறது. தற்போது லண்டனில் இரண்டாவது இடத்தை வகிக்கும் சன் நாளிதழும் மர்டோக்கிற்கு சொந்தமானதாகும். ஆஸ்திரேலியாவை சார்ந்த மர்டோக் 1843 ஆம் ஆண்டு ஜான் ப்ரவுன் பெல் துவங்கிய நியூஸ் ஆஃப் த வேர்ல்டை 1960-களில் வாங்கியதன் மூலம் லண்டனில் தனது ஊடக சாம்ராஜ்ஜியத்திற்கு துவக்கம் குறித்தார். தற்போது இப்பத்திரிகை விவாதத்தில் சிக்கியதை தொடர்ந்து பிரச்சனையை சமாளிக்கத்தான் பத்திரிகையை மூடும் தீர்மானம் என கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment