தாராசிங் என்பவரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே. ஜெயினுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து அவரைப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்து ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி தாரா சிங் என்பவரை ராஜஸ்தான் சிறப்பு அதிரடி குழுவினர் என்கவுண்டரில் கொலை செய்தனர். இது போலி என்கவுண்டர் என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் தாராசிங்கை ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே சட்ட விரோதமாக அதிரடிப்படையினர் அழைத்துச் சென்று அங்கிருந்து அவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான ஆம்பெர் பகுதிக்குக் கொண்டு சென்று அவரைக் கொலை செய்ததை சிபிஐ கண்டுபிடித்தது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு போலி என்கவுண்டர் நாடகம் என்று கூறியுள்ள சிபிஐ, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதில், ராஜஸ்தான் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜெயின் உட்பட 10 பேர் தலைமறைவாக உள்ளனர். உயர் அதிகாரி பொன்னுசாமி காவல்துறை ஆய்வாளர்களான நிசார்கான், நரேஷ் சர்மா, துணை ஆய்வாளர்கள் சுரேந்திர சிங், சத்தியநாராயண் கோதாரா மற்றும் ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் முன்ஷிலால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ளவர்களில் ராஜஸ்தான் மாநில ஊர்க்காவல் படையின் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்த ஏ.கே. ஜெயினைக் கடந்த மாதம் 15-ம் தேதி விசாரணைக்கு வருமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து இவர் வேலைக்கு வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை. இதனிடையே உள்ளூர் நீதிமன்றம், சிபிஐ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஏ.கே. ஜெயினுக்குப் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஜெயினைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக மாநில அரசு அறிவித்தது. இப்போது அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment