"அனுமதியின்றி லே மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் ராணுவம் சோதனை நடத்தியது சட்டமீறல். ராணுவத்தின் இந்த அத்துமீறலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராணுவம்மீது சாடியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் ராணுவத்தினர் கடந்த மே 30,31-ம் தேதிகளில் திடீர் சோதனை நடத்தினர். தீவிரவாதிகளின் செயற்கைகோள் தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோது, அவர்கள் லே மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்தச் சோதனையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை. ராணுவத்தின் இந்தத் திடீர் சோதனை ஹோட்டல்களில் தங்கி இருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மிகப் பெரும் தொந்தரவுகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சோதனையில் ராணுவம் தங்களிடம் அத்துமீறி நடந்ததாக அவர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் காவல்துறையினர் ராணுத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது பெரும் பிரச்னையைக் கிளப்பியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசும் போது, "ராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டம் லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் அமலில் இல்லை. எனவே லே மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் ராணுவத்தினர் அத்துமீறி சோதனை நடத்தியது சட்டத்துக்கு விரோதமானது. ராணுவத்தின் இந்தச் சட்டமீறலை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment