ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த யோகா சாமியார் பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டார் என்று பரவிய தகவலால் டெல்லி ராம் லீலா மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், கறுப்புப் பணத்தை உடனடியாக மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் சனிக்கிழமையன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ராம்தேவின் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனாலும் ராம்தேவ் உடன்பட மறுத்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ராம் லீலா மைதானத்தின் உள்ளே நுழைந்த காவல்துறையினர் பாபா ராம்தேவை ராம்லீலா மைதானத்தைவிட்டு அப்புறப்படுத்தினர். ராம்தேவின் ஆதரவாளர்களையும் காவல்துறையிர் மைதானத்தைவிட்டு அப்புறப்படுத்தினர்.
தொடக்கத்தில் பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. பாபா ராம்தேவ் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் குழுமி இருந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர்களைக் கலைக்க டெல்லி காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. அங்கிருந்து வெளியேற மறுத்தவர்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்று மைதானத்திற்கு வெளியே விட்டனர்.
ராம் லீலா மைதானத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காகவே அனுமதி பெற்றதாகவும் தற்போது அனுமதியை மீறிச் செயல்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment