தூத்துக்குடி துறைமுகத்தில் அடித்த பயங்கர சூறாவளி காற்றால் சேனலை விட்டு மாறி தரைதட்டி நின்ற நிலக்கரி கப்பல், 3 இழுவை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு 50ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிக் கொண்டு வெளிநாட்டிலிருந்து டைஹர் வெஸ்ட் என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் 10.7 மீ ஆழமே இருப்பதால் பெரிய கப்பல்கள் அதிக டன் சரக்கோடு உள்ளே வரமுடியாது.
இதனால் கப்பலைத் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளியேநிறுத்தி, பாதி சரக்குகளை இறக்கி விட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்குள் இழுவை கப்பல்கள் மூலம் இழுத்து வரப்பட்டு கப்பல் தளத்தில் நிறுத்தப்படும். இதில், நேற்றுமுன்தினம் இரவு 7மணிக்கு மேல் டைஹர் வெஸ்ட் என்ற கப்பல் இழுவைகப்பல்கள் மூலம் இழுத்து வரப்பட்டது.
அப்போது திடீரென சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கப்பல் வரும் சேனலை விட்டு விலகி, கப்பல் தரைதட்டி நின்றது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த திருவள்ளுவர், இந்திரா, காந்தி ஆகிய 3 இழுவை கப்பல்கள் மூலம் தரை தட்டிய கப்பல் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின் துறைமுகத்தின் 3வது தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நிலக்கரிகள் இறக்கும் பணி தொடங்கியது. சரக்குகள் அனைத்தும் இறக்கப்பட்டபின் கப்பலின் அடிப்பாகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment