Thursday, June 23, 2011

தேர்தலில் திமுக தோற்றதற்கு மாணவர்களே காரணம் - பரிதி இளம்வழுதி

"கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியடைய மாணவர்களே காரணம்" என திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

நாகை அபிராமி அம்மன் கோவில் அருகே நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு பேசும்போது,"கடந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டுத் தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் திமுக தோற்றிருக்கலாம். ஆனால் திமுக-வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பதில்லை. பொதுவாக தேர்தலில் தோற்றவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அத்தேர்தல் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்பதே உண்மை. காரணம் அவர்கள் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்ததுதான்.

ஆட்சிமாற்றத்தை விரும்பிய மாணவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை நிறுத்தியதோடு மக்களுக்கு பயன்தரும் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாக்களித்த கல்லூரி மாணவர்களுக்கு 1991-1996, 2001-2006 வரை ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார் என்பது தெரியாது.

ஒரு அரசு கொண்டுவரும் திட்டத்தை அடுத்துவரும் அரசு தொடர வேண்டும். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தைத் திமுக தலைவர் கலைஞர் நிறுத்தவில்லை. சத்துணவுடன் வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கினார்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறையையும் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும்போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆந்திரா ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி என்றுதான் செய்தி வருகிறது" என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza