தூத்துக்குடி மாவட்டத்தில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆபரேஷன் கேம்லா ஒத்திகை தொடங்கியது. தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் ஆகும். ஆகையால் கடல் வழியாக தீவிரவாதிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடக்கூடாது, என்பதற்காக கடற்கரை ஒரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கடலோர பாதுகாப்பு படையையும் அரசு உருவாக்கி உள்ளது. மேலும் கடற்கரை ஒரங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, படகுகள் மூலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் கண்காணிப்பு திறனைப் பரிசோதிக்கும் வகையில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து இலக்கை அடைய முயற்சிப்பதும், அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதுமான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியது. ஆபரேஷன் கேம்லா என்று பெயரிடப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சி 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படை, கியூ பிரிவு காவல்துறையினர், மாவட்ட காவலர்கள் இணைந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து கடற்கரை பகுதியிலும் காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment