Wednesday, June 29, 2011

கனிமொழி அப்ரூவராக மாறுவாரா?-தி.மு.க கலக்கம்

kanimoli
சென்னை:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் மற்றும் கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அப்ரூவர்களாக மாற்ற சி.பி.ஐ முயற்சி மேற்கொண்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்களான மும்பையில் டி.பி ரியாலிட்டியிடமிருந்து கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கலைஞர் டி.வியில் 20 சதவீதம் பங்குரிமையாளரான கனிமொழியின் மீது சதித்திட்டம் தீட்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுவை நிராகரித்த சூழலில் கனிமொழியை அணுகிய சி.பி.ஐ அதிகாரிகள் கலைஞர் டி.விக்கு எவ்வழியில் பணம் வந்தது என்பதை தெரிவித்தால் ஜாமீன் கிடைக்க வழிவகை செய்யலாம் என வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

டி.பி ரியாலிட்டி-கலைஞர் டி.வி பணம் கொடுக்கல்-வாங்கலில் ஒரிஜினல் ஆவணங்கள் இதுவரை சி.பி.ஐக்கு கிடைக்கவில்லை. நகல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டி.பி ரியாலிட்டியின் உரிமையாளர் ஷாஹித் பல்வா தி.மு.கவின் ஒரு முக்கிய தலைவரை சந்திக்க நான்கு தடவை சிறப்பு விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த தலைவர் மூலமாகத்தான் கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் செக்குகள் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. அந்த தலைவரின் பெயரை கூற சி.பி.ஐ கனிமொழியிடம் வலியுறுத்துகிறது. கலைஞர் டி.வியில் பணியாற்றும் ஊழியர்கள் தாம் கனிமொழிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் தன்னை திகார் சிறையில் சந்திக்க வந்த தனது தந்தையான கலைஞர் மு.கருணாநிதியிடம் கனிமொழி இதனை தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் அந்த தலைவரின் பெயரை கூறி அப்ரூவராக மாறுவேன் என அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கலைஞர் டி.வியில் 60 சதவீத பங்குகளுக்கு சொந்தக்காரரான தயாளு அம்மாளை வழக்கில் சாட்சியாக சேர்த்த பொழுது தன்னை சிறையிலிருந்து விடுவிக்க கூட இயலாதது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த தலைவரின் பெயரை கூறினால் தி.மு.கவின் எதிர்காலம் தகர்ந்துவிடும் என கூறி தனது மகள் கனிமொழியின் முன்னால் கலைஞர் கண்ணீர் வடித்துள்ளார்.

கருணாநிதி கனிமொழியை சந்தித்த பிறகு ஒரு வாரத்திற்குள் கலைஞரின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திகார் சிறைக்கு சென்று கனிமொழியை சந்தித்தது அவரை சமாதானப்படுத்துவதற்குத் தான் என கூறப்படுகிறது. சிறையில் கனிமொழியுடன் அரைமணி நேரம் உரையாடிய ஸ்டாலின் சரத்குமார், ஆ.ராசா ஆகியோரையும் சந்தித்த பிறகு திரும்பினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza