Thursday, June 2, 2011

பலஸ்தீன் ஆசிரியையை எரித்துக் கொல்லமுயன்ற யூத ஆக்கிரமிப்பாளர்கள்

கடந்த புதன்கிழமை (01.06.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பலஸ்தீன் ஆசிரியை ஒருவரை வழிமறித்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் குழுவொன்று அவரைத் தாறுமாறாகத் தாக்கிக் கொல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் நூர் அல் ஹுஸைனி. தன்னுடைய பணியிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆண்களும் பெண்களுமாய் யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று அவரை வழிமறித்தது. சிலர் அவரது ஹிஜாபை இழுத்தனர். மற்றும் சிலர் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவரைத் தாறுமாறாகத் தாக்கினர். இன்னும் சிலர் அவரைக் காட்டுமிராண்டித்தனமாகக் கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்து, எரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்.

அத்தெருவில் சென்று கொண்டிருந்த பலஸ்தீனர்கள் சிலர் இதனைக் கண்ணுற்று நடைபெற இருந்த அசம்பாவிதத்தில் இருந்து அந்தப் பலஸ்தீன் பெண்மணியைக் காப்பாற்றி உள்ளனர்.
இந்தச் சம்பவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பெரும் பதட்டம் நிலவியது.

அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை யூத மயப்படுத்தும் செயற்திட்டங்கள் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பலஸ்தீனர்கள் மீதான தொடர் கைது நடவடிக்கைகள், யூதக் குடியிருப்புக்களை அதிகரித்தல், பாரம்பரியமாக ஜெரூசலத்தில் வாழ்ந்துவரும் பலஸ்தீனர்களுக்கு மாநகர சபையால் வழங்கப்படக்கூடிய கீழ்க்கட்டுமான வசதிகளை வழங்க மறுத்தல், அவர்களை நகரில் இருந்து வெளியேற்றுதல், அவர்களின் இருப்பிடங்களைத் தகர்த்தல், இஸ்ரேலியப் பிரிவினைச் சுவர் மூலம் ஜெரூசல நகரத்துடன் அதனைச் சுற்றியுள்ள பலஸ்தீன் கிராமங்கள் கொண்டுள்ள தொடர்பை முற்றாகத் துண்டித்தல் முதலான நடைமுறைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இத்தகைய இனத் துவேஷ நடவடிக்கைகளாலும், 'ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலமே யூத தேசத்தின் தலைநகராய் அமைதல் வேண்டும்' எனும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அண்மைய பிரகடனத்தினாலும் துணிவு பெற்றுள்ள யூத ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் மக்களான பலஸ்தீனர்கள் மீது நாள்தோறும் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளும் அட்டகாசங்களும் அளவுகடந்த நிலையில் உள்ளன என ஜெரூசல நகரில் வாழும் பலஸ்தீனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யூத ஆக்கிரமிப்பாளர் குழுக்கள் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையும் ஆக்கிரமிப்புக் காவல்துறையும் அவற்றைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதோடு, தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பலஸ்தீனர்கள் எதிர்த்தாக்குதல்கள் நடாத்தும் பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யவும் தயங்குவதில்லை. இதனால், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் அடிக்கடி மோதல்கள் வெடித்தபடி உள்ளன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza