கடந்த புதன்கிழமை (01.06.2011) காஸாவின் ரஃபா கடற்பரப்பில் பலஸ்தீன் மீன்பிடிப் படகை விரட்டிச் சென்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அதன்மீது தாக்குதல் நடாத்தியுள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆயுதந் தாங்கிய இயந்திரப் படகில் சென்று பலஸ்தீன் மீன்பிடிப் படகுமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படை நடாத்திய தாக்குதலின் விளைவாக, அப்படகு கவிழ்ந்து 20 வயது இளைஞரான பலஸ்தீன் மீனவர் கடலில் மூழ்கினார்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அஹ்மத் அபூ ஸாலிமா எனும் பலஸ்தீன் மீனவரை சற்று நேரத்தில் அப்பக்கமாகச் சென்ற மீனவர்கள் சிலர் கண்டு காப்பாற்றியுள்ளனர்.
காஸாவை அடுத்துள்ள கடற்பிராந்தியத்தில் தமது அன்றாட வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் மீனவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இத்தகைய அடாவடித் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றவண்ணமே உள்ளன. இதனால், பலஸ்தீன் மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையின் விளைவால் எத்தனையோ இன்னல்களை அனுபவித்து வரும் காஸா மக்கள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment