தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசின் செயல்திட்டங்களை விளக்கி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் இதுகுறித்து கூறியதாவது:
அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 24 மணி நேரம் செயல்படும் மையங்களாக மாற்றியமைக்கப்படும்.
மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். மருத்துவத்துறையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில் தெளிவான வழிமுறைகளை இந்த அரசு வகுக்கும்.
இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டிருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment