Friday, June 3, 2011

மீண்டும் "மோனோ ரெயில்" - தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசின் செயல்திட்டங்களை விளக்கி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றியபோது இது குறித்து கூறியதாவது:

சென்னை மற்றும் பிற நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிர்வாகத்திற்குப் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தில் பொதுப் போக்குவரத்தின் பங்கு தற்போது 27 சதவீதம் உள்ளது. இந்த விழுக்காடு 2026 ஆம் ஆண்டுக்குள் 46 சதவீதத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே, இந்த அரசு ஒருங்கிணைந்த பன்முறை போக்குவரத்து வசதியினை சென்னை மாநகரில் ஏற்படுத்தும்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டம் 45 கிலோமீட்டர் அளவிற்கே திட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவு அதிகமாக உள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர மிகுந்த காலமாகும். எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக 300 கிலோமீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆளுநர் தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. பின்னர் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பின், மோனோ ரெயில் திட்டம் கைவிடப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza