டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு அனுப்பப்பட்ட ராம்தேவ், ஹரித்துவாரிலுள்ள அவரது பதஞ்சலி யோக பீடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று ஞாயிறு இரண்டாவது முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த யோகா குரு ராம்தேவ், டெல்லிக்கு தாம் நிச்சயம் போக இருப்பதாகவும், டெல்லி யாருடைய தனியார் சொத்தும் அல்ல என்றும் கூறியுள்ளார். உண்ணாவிரதத்தைத் தொடர நொய்டா நோக்கி புறப்பட்ட பயணத்தை, நிர்வாக காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் விளக்கம் கூறியுள்ளார்.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியுடன், நொய்டாவில் உண்ணாவிரதம் இருப்பதற்கான அனுமதி கொடுக்கும் விஷயத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று தாம் இன்னும் நம்புவதாகவும் ராம்தேவ் கூறியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில், காவல்துறையினரின் நடவடிக்கை காரணமாக சுமார் 5,000 ஆதரவாளர்களை இன்னும் காணவில்லை என்றும், நிறை பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 4 மற்றும் 5க்கு இடையிலான இரவில், டெல்லியில் தாம் நடத்திய சத்தியாகிரகத்தை காவல்துறையினர் மூலம் முறியடித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தம்மைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, ஞாயிறு அன்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். கறுப்புப் பணத்திற்கு துணை போகிறவர்கள் தம்மை டெல்லியிலிருந்து வெளியேற்றினாலும், தம்முடைய கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
உத்தர்கண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், நேற்று ஞாயிறு பிற்பகல், பதஞ்சலி யோகபீடத்தில் பாபா ராம்தேவ்வுடன் மூடிய அறையில் தனித்து சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் யோகா குரு நடத்தப்பட்ட விதம் குறித்து தாம் அதிர்ச்சியடைவதாகவும், “ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் துவங்கியுள்ள சத்தியாகரகத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம். அதோடு அவர் இந்த மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் அவரது உண்ணவிரத்த்தை தொடரலாம்” என்றும் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான சத்தியாகிரகி அன்னா ஹ்சாரே தம்முடன் மேடையில் பங்கேற்றால், எந்த கோரிக்கையையும் நிறைவேற்றமாட்டோம் என்று அச்சுறுத்தியதாக, மத்திய அரசு மீது பாபா ராம்தேவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment