காஸாவில் உள்ள பலஸ்தீன் சிறைக்கைதிகள் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதத்தில் மட்டும் 370 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள 370 பேரில் 40 சிறுவர்கள், 5 பெண்கள், 2 பலஸ்தீன் சட்டசபை உறுப்பினர்கள், 20 வெளிநாட்டைச் சேர்ந்த பலஸ்தீன் ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் என்போரும் உள்ளடங்குகின்றனர்.
மேற்குக் கரையின் அல் கலீல் நகரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர் கைது நடவடிக்கைகளின் பிரதான களமாகத் திகழ்கின்றது. கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்களில் 75 பேர் இந்நகரத்தைச் சேர்ந்த பலஸ்தீன் பொதுமக்களே என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகள் விவகார அமைச்சகத்தின் ஊடகத்துறைப் பணிப்பாளர் ரியாத் அல் அஷ்கர் குறிப்பிடுகையில், ஒடுங்கிய இருண்ட கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கினை எதிர்த்து கடந்த மாதம் 6 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளைச் சேர்ந்த பலஸ்தீன் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த மே மாதத்தில், பலஸ்தீன் மக்கள் முன்னணித் தலைவர் அஹ்மத் சாதாத்திற்கு மேலும் ஆறு மாதகாலம் தனிமைச் சிறைத் தண்டனை நீடிக்கப்பட்டுள்ளது. இவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தினால் கடந்த இரண்டு வருட காலமாகத் தனிமைச் சிறையில் அடைத்துவைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக ரமெல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனேகமான பலஸ்தீன் கைதிகளின் மருத்துவ சிகிச்சைகள் கடந்த மாதம் ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தினால் இடை நிறுத்தப்பட்டிருந்தன என மேற்படி அமைச்சகத்தின் மே மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment