ஐந்து வருடகால முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லவிருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 இன் பயணத்தைத் தடுத்து நிறுத்துமுகமாக அமெரிக்க நிர்வாகம் துருக்கியிடம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக இன்றைய ஹீப்ரு நாளிதழ் ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் தன்னுடைய செய்திக் குறிப்பில், 'துருக்கிய அரசு இந்தப் பயணத்தைத் தவிர்ப்பதன் மூலம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்து, இஸ்ரேல்- பலஸ்தீன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒரு நடுவராகத் தொடர்ந்தும் செயற்பட முடியும்' என வாஷிங்டன் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
துருக்கிய தினசரியின் செய்தியை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள ஹீப்ரு நாளிதழ், இத்தகையதொரு கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் அமெரிக்கா துருக்கியத் தரப்பிலிருந்து ஒரு சாதகமான மறுமொழியை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை துருக்கி நிராகரித்து விடும் என்று அமெரிக்க வட்டாரங்கள் எதிர்வுகூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துருக்கிய மற்றும் ஐரோப்பிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2, நிவாரண உதவிப் பொருட்களோடு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி காஸாவை நோக்கிப் பயணப்பட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment