இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அல் ஃபரீஸிய்யா, அல் மெய்த்தா ஆகிய பகுதிகளில் அராபிய பதூனி மக்களுக்குச் சொந்தமான 14 கட்டடங்களை புல்டோஸர் மூலம் இடித்துத் தகர்த்துள்ளது. இப்பகுதியில் பதூனிய மக்கள் வாழும் சுமார் 5 குடியிருப்புகள் காணப்படுகின்றன.மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் இம்மக்களின் வாழிடங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்களைவிட்டு வெகுதொலைவில் அமைந்திருந்த போதிலும், அல் மெய்த்தாவில் 8 வீடுகளும் அல் ஃபஸ்ரிய்யாவில் 6 வீடுகளும் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் இடித்து நிர்மூலமாக்கப்பட்டன.
இதன்போது, புல்டோஸர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ ஜீப்வண்டிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டன. இதே பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரமாய் இருந்த விலங்குப் பண்ணைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் அழித்தொழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், செம்மறியாட்டு மந்தைகளின் மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள நிலப்பிரதேசம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்குமுகமாக ஏலவே பல கட்டுப்பாடுகளை ஆக்கிரமிப்பு இராணுவம் விதித்திருந்தது என்பதைச் சuட்டிக்காட்டினர்.
இப்பிரதேசம் இதமான காலநிலையோடு தாராளமான நீர்வளம் கொண்டதாகவும் உள்ளது. விவசாயத்துக்கு ஏற்றதும் பச்சைப் பசேலென்ற புல்வெளிகளைக் கொண்டதுமான இந்நிலப்பரப்பு துபாஸ், தமூன் எனும் பிராந்திய விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாய் இருந்துவந்துள்ளது. இக்காரணங்களே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையை அப்பகுதியை நோக்கி ஈர்த்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இப்பிரதேசம் ஒரு மூடிய இராணுவ வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் பலஸ்தீனர்கள் நடமாடவோ நிலங்களைப் பயன்படுத்தவோ தடைவிதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஏப்ரல் 2010 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பொதுமக்களிடையே அறிவிப்புப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment