Sunday, June 19, 2011

ரூ.40 லட்சம் துணிகர மோசடி: மகளிர் குழு தலைவிகள் மீது புகார்!

வங்கியில் வாங்கிய கடன் பணம் ரூ.40 லட்சத்தை உறுப்பினர்களுக்கு வழங்காமல் மகளிர்குழு தலைவிகள் 2 பேர் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பூசாரி தெருவைச் சேர்ந்த உத்தண்டகண்ணன் என்பவரின் மனைவி ராணி. அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி செல்வி. இவர்கள் இருவரும் மகளிர் குழு தலைவிகளாக உள்ளனர். இவர்களுக்குக் கீழ் பல உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை அறிமுகப்படுத்தி வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவரும், காந்தி சேவாக சங்க அறக்கட்டளை தலைவருமான தவமணி வங்கிகளுக்குச் சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய ஊர்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ராணி, செல்வி இருவரும் சேர்ந்து மகளிர் குழுக்களுக்காக ரூ.40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தை உறுப்பினர்களுக்கு வழங்காமலும், வங்கியில் பணத்தைத் திரும்ப செலுத்தாமலும் ஏமாற்றி வந்துள்ளனர். 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் தவமணியிடம் கூறினர். இதையடுத்து நடத்திய விசாரணையில் ராணி, செல்வி ஆகியோர் மகளிர் சுயஉதவிகுழு பெயரில் வங்கியில் பெற்ற பணத்தை உறுப்பினர்களுக்கு வழங்காமல் வெளியாட்களுக்கு அதிக வட்டிக்குக் கொடுத்தது அம்பலானது.

இதுகுறித்து தவமணி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் வாசுதேவநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராணி, செல்வியைத் தேடி வருகின்றனர். மகளிர் குழு உறுப்பினர்கள் பெயரில் மகளிர் குழு தலைவிகளே வங்கியில் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza