Saturday, May 28, 2011

ஏமனில் கலவரம்: இடையில் சிக்கித் தவிக்கும் இந்திய நர்சுகள்

ஏமனில் அதிபருக்கு எதிராக ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரத்தில் சிக்கி தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற டிரக்கை நேற்று கலவரக்காரர்கள் குண்டு வீசித் தகர்த்தனர். இதனால் பலர் பசியால் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடான ஏமன் தலைநகர் சன்ஆவில் உள்ள மிலிட்டரி மருத்துவமனையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ஷெய்க் சாதிக் அல்அமரின் ஆதரவாளர்களான பழங்குடியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சன்ஆவில் கடந்த சில நாட்களாக அதிபரின் ஆதரவாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே பயங்கரமான கலவரம் வெடித்துள்ளது. இக்கலவரத்தினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நேற்று சன்ஆவில் நடந்த சண்டையின் போது அங்குள்ள ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டு 28 பேர் பலியானார்கள். மிலிட்டரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய நர்சுகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள விடுதியை நோக்கி கலவரக்காரர்கள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்ட வண்ணமும் உள்ளனர்.

நர்சுகள் தங்கியுள்ள அறைகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று ஏமன் அரசு, விடுதியில் தங்கியுள்ள நர்சுகளுக்கு டிரக் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தது. ஆனால், இதனைத் தெரிந்து கொண்ட கலவரக்காரர்கள் உணவு கொண்டு சென்ற டிரக்கை குண்டு வீசித் தகர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து, நேற்றிரவு விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு காய்ந்து போன பிரட் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால், அவர்கள் போதிய உணவு கிடைக்காமல் மயக்க நிலையில் உள்ளனர்.

விடுதியை நோக்கி கலவரக்காரர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் வருவதால் ராணுவத்தினர் அவர்களை சமாளித்து வருகின்றனர். எனினும், நர்சுகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏமன் அரசு அந்நாட்டில் ஐ.நா. சபையில் இடம்பெற்றுள்ள இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் நர்சுகளை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza