டமாஸ்கஸ்:சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வரும் ராணுவம் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 பேர் கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் டாங்கர்களிலும், வாகனங்களிலும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசங்களில் முகாமிட்டனர். மின்சாரம்-தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பிறகு ராணுவம் எதிர்ப்பாளர்களை சுற்றி வளைத்தது. ஆனால், நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ்ஸாருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தேறின.
பெரும்பாலான இடங்களில் ராணுவம் வீடுதோறும் சோதனைகள் நடத்திவருகிறது. பரிசோதனையின் போது உருவான மோதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சாதாரண மக்கள் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவிதமான தகவல் தொடர்புகளையும் ராணுவம் துண்டித்து விட்டதால் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து உண்மையான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை என அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்ப்பாளர்களின் வலுவான பிரதேசமான தராவில் பலமுறை துப்பாக்கிச்சத்தமும், குண்டுவெடிப்பு சத்தங்களும் கேட்டதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. சிரியாவின் மேற்கு பகுதியில் பல வீதிகளிலும் தற்போது இறந்த உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இந்த உடல்களை மாற்றுவதற்கு எவராலும் இயலவில்லை என மனித உரிமை ஆர்வலரான ராமி அப்துற்றஹ்மான் தெரிவிக்கிறார். பாரபட்சமான ராணுவத்தின் நடவடிக்கை என பலரும் புகார் தெரிவித்ததாக வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அப்பாவி மக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் ராணுவத்தின் நடவடிக்கையை அரபு லீக் கண்டித்துள்ளது. சிரியாவில் ராணுவம் நடத்திவரும் கொடூர மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கு கொண்டுவர பஸ்ஸாருல் ஆஸாதிற்கு உலக நாடுகள் நிர்பந்தம் அளித்துள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment