புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
அதனால்தான், இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்ய எஸ்.ஐ.டி புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என நிரூபணமான என்டோ ஸல்ஃபான் கிருமிநாசினியை தடைச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயற்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
63 நாடுகளில் தடைச்செய்யப்பட்ட என்டோ ஸல்பான் 70 சதவீதம் இந்தியாவில் தான் தயாராகிறது.பெரும் கிருமி நாசினி நிறுவனங்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து என்டோஸல்பானை தடை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என கருதுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து தெரிவித்துள்ளது. என்டோஸல்பான் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கபளீகரிக்க வலதுசாரி ஹிந்துத்துவா குழுக்கள் நடத்தும் முயற்சியைக் குறித்து பாப்புலர் ப்ரண்ட் கவலை தெரிவித்துள்ளது. ஊழல்வாதிகளான ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் முயற்சிகள் குறித்து சமூக-கலாச்சார ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், முழுமையான லோக்பால் மசோதாவிற்கான முயற்சி தொடர வேண்டும் எனவும் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜய்தாப்பூரில் உள்ளூர் மக்களின் விருப்பத்தையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி அணுமின் நிலையம் நிர்மாணிக்க முயலும் அணுசக்தி துறைக்கு பாப்புலர் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உருவான சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுசக்தி விபத்தும் அணு உலைகள் மிகப்பெரிய ஆபத்தையும், அதிகமான செலவினத்தையும் கொண்டது என்பதை நிரூபித்துள்ளன.
இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை விளைவிப்பதாகும். பிரான்சில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படாத தொழில் நுட்பத்தை ஜய்தாப்பூர் அணுமின் நிலையத்தில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரத்னகிரியில் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது.
பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மவ்லானா உஸ்மான் பேக், பேராசிரியர் பி.கோயா, யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, அனீஸ் அஹ்மத், இல்லியாஸ் தும்பெ, அஷ்ரஃப் மெளலவி, ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், எ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment