டமாஸ்கஸ்:தலைநகரான டமாஸ்கஸ் உட்பட சிரியாவின் நகரங்களில் அரசுக்கெதிரான போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பொழுது வீதிகளெல்லாம் மனித வெள்ளத்தால் மிதந்தன. கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்காக ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பிரார்த்தனைக்கு பிறகு 1963-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் பஆஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பினர். தராவில் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் களமிறங்கினர். சிரியா புரட்சி 2011 என்ற பேஸ் புக் பக்கத்தில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தரா நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நகரத்தின் சுற்றுமுள்ள பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட போராட்டம் நடைபெற்றது.
அதே வேளையில், சிரியாவில் அரசுக்கெதிரான போராட்டத்திற்கு பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ள இஃவானுல் முஸ்லிமீன் களமிறங்கியுள்ளது.’இறைவன் மிகப்பெரியவன்! சுதந்திரத்திற்காகவும், கண்ணியத்திற்காகவும் நடக்கும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி! என இஃவான்களின் தலைமை கூறியதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆறுவாரங்களை தாண்டியுள்ள சிரியாவின் மக்கள் எழுச்சிப்போராட்டத்திற்கு முதன்முறையாக இஃவானுல் முஸ்லிமீன் பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனித உரிமை குழு ஜெனீவாவிலும், ஐரோப்பா யூனியன் ப்ரஸ்ஸல்ஸிலும் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment