குஜராத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்பப பெற்றுக் கொண்டுள்ளது.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்த நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அவர் தனது பிரமாண பத்திரத்தில், “2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரங்கள் குறித்து முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, இந்துக்கள் தங்களது கோபத்தை காட்ட அனுமதிக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கினார்’என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் தான் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்காமல் 5 போலீஸாரை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தது.
இந்நிலையில் அந்த பாதுகாப்பும் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை மாநில காவல்துறை இயக்குநர் பிறப்பித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் பட், இது இரண்டாவது முறையாக எஸ்.ஐ.பியின் சிபாரிசை மீறி பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். என்னைக் குறித்து கவலையில்லை. எனது குடும்பத்தின் பாதுகாப்பு புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.
மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததைத் தொடர்ந்து குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தும் நானாவதி கமிஷன் சஞ்சீவ் பட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினைக் குறித்து சஞ்சீவ் பட் விவரிக்க வருகிற மே-16-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment