Saturday, April 30, 2011

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்

mathaani
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.

இதனை புரிந்துக்கொள்ள வழக்கின் விளக்கமான விபரங்களுக்கு உள்ளே செல்ல வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், இவ்விவகாரத்தில் தீர்மானம், இரு கட்சிதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வருகிற மே மாதம் நான்காம் தேதி ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் கைது செய்து சிறையிலடைப்பது நீதியல்ல என அப்துல் நாஸர் மஃதனிக்காக வாதாடிய வழக்கறிஞர் சாந்திபூஷன் தெரிவித்தார். எனது கட்சிதாரர் எட்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கர்நாடகா போலீஸ் தாக்கல் செய்த முதல் இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அப்துல்நாஸர் மஃதனியின் பெயர் இல்லை.

இத்துடன் அவருடைய ஆரோக்கிய நிலையையும் பரிசீலிக்கவேண்டும். சாந்தி பூஷனின் வாதத்தை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், அப்துல் நாஸர் மஃதனியின் உடல் ஆரோக்கிய பிரச்சனையையும், ஒரு காலை இழந்து சக்கர நாற்காலியை பயன்படுத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியது.இதனை எதிர்த்த கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும், ஒரு கால் இல்லாததும் சதித்திட்டத்தில் பங்கேற்க மஃதனிக்கு தடையாக இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

இச்சூழலில்தான் மஃதனி எகிப்திற்கு சென்றுள்ளார். குடகு, சூரத், அஹ்மதாபாத் ஆகிய இடங்களுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். இது அவருக்கு பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் ஒன்றுமில்லை என்பதற்கான ஆதாரம் என ஜெயின் கூறினார். ஆனால், மஃதனியின் ஆரோக்கிய பிரச்சனைகள் சாதாரணமானதல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் அப்துல்நாஸர் மஃதனிக்கு ஜாமீன் அனுமதித்து விடும் என்பது உறுதியானவுடன் கர்நாடகா அரசுதரப்பு வழக்கறிஞர் மீண்டும் விசாரணையில் இடைமறித்தார்.

நாடு முழுவதும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சூரத்திலும், அஹ்மதாபாத்திலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றிற்கும் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்புள்ளது  என சந்தேகிப்பதாகவும் ஜெயின் கூறினார். தங்களின் பிரமாணப்பத்திரத்தை வாசித்த பிறகே இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டுமெனவும், ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டுவாரத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஜெயின் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அப்துல்நாஸர் மஃதனியை இனிமேலும் சிறையிலடைத்திருப்பது சரியல்ல. அவருக்கு விரைவாக ஜாமீன் அளிக்க வேண்டும் என சாந்திபூஷன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசின் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்கவும், செவ்வாய்க் கிழமை இதற்கான அப்துல் நாஸர் மஃதனியின் பதிலை பைல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza