Friday, April 8, 2011

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் பாகிஸ்தானிலிருந்து அல்ல, ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளிடமிருந்தாகும் – அன்னா ஹஸாரே


Anna-Hazare-014புதுடெல்லி:முழுமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்யக்கோரி சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே ஜந்தர் மந்தரில் நடத்திவரும் சாகுவரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது.இதனால் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது.
லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன. எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்குழுவின் தலைவராக அன்னா ஹசாரே இருக்க வேண்டுமென்பது ஹசாரே தரப்பினரின் கோரிக்கையாகும்.


இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுடன் ஹசாரேயின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் நேற்று இரண்டுதடவை பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என கபில் சிபல் அறிவித்துள்ளார்.
அதேவேளையில் போராட்டம் தொடரும் என அறிவித்த ஹசாரே, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் பாகிஸ்தானிலிருந்து அல்ல. ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளிடமிருந்துதான் என தெரிவித்துள்ளார்.ஹஸாரே தலைவராகக் கொண்ட உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளதாக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டுமென்பது பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கையாகும்.

இரண்டு காரியங்கள் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கபில் சிபல் தெரிவித்தார்.பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், முந்தைய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் விபரங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் விளக்கிய பிறகு கபில் சிபல் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார். குழு உருவாக்க அரசு தயார் என்றாலும், அன்னா ஹஸாரேயை அதன் தலைவராக நியமிப்பதில்தான் அரசுக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை குழுவிற்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.லோக்பால் மசோதா தொடர்பான அமைச்சரவை கமிட்டியின் பல உறுப்பினர்களும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் தீர்மானம் எடுக்க கூடுதல் அவகாசம் தேவையென பேச்சுவார்த்தையில் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கமிட்டியின் தலைவர் பிரணாப் மேற்கு வங்காளத்திலும், இதர உறுப்பினர்களான எ.கெ.ஆண்டனி, ப.சிதம்பரம் ஆகியோர் கேரளா மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு உறுப்பினரான சரத்பவார் ஏற்கனவே கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்துவிட்டார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்னா ஹஸாரேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊழலை தடுக்கும் விஷயத்தில் தங்களுக்கு இரண்டு கருத்து இல்லை. ஊழலை தடுக்க வலுவான பயனுள்ள சட்டம் தேவைப்படுகிறது. தங்களின் போராட்டம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கருதுவதாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் 71 வயதான அன்னா ஹஸாரேவுக்கு ஏராளமான அமைப்புகளும், தனிநபர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊழலை தடுக்க வலுவான லோக்பால் சட்டம் தேவை என சி.பி.எம் கட்சி கூறியுள்ளது.
சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் அருணா ராய் ஹஸாரேக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல் வாட் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெய்ப்பூர், மும்பை, சட்டீஷ்கர், லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza