ரலேகான் சித்தி(மஹாராஷ்ட்ரா):எதிரி விமானங்களின் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பிய ராணுவத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றிய கிஷன்பாபு ராவு ஹஸாரே இந்த கிராமத்திற்கு திரும்பிய வேளையில் அவருடைய நிகழ்ச்சி நிரலில் ஊழலுக்கு எதிரான இயக்கம் இடம்பெறவில்லை.
அரசு கட்டமைப்புகளையும்,நீதிமன்றங்களையும் பார்வையாளர்களாக மாற்றிவிட்டு தன்னை சுற்றிலும் நடைபெறும் ஊழல் என்ற பொது எதிரிக்கு எதிராக போர் பிரகடனம் செய்ய இந்த போராளிக்கு அதிக கால அவகாசம் தேவைப்படவில்லை.
1960-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹஸாரே 1975-ஆம் ஆண்டு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.
ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஹஸாரே தான் பிறந்த கிராமத்திற்கு திரும்பிய வேளையில், அங்கு வறுமையும், வறட்சியும், குற்றங்களும், மதுபானமும் ஒன்றிணைந்து அந்த கிராமத்தை சீர்குலைத்திருந்தது. அங்கிருந்து துவங்கியதுதான் ஹஸாரேயின் போராட்டம்.
கிராமத்தில் கால்வாய்களையும்,நீர்நிலைகளையும் உருவாக்கி மழை நீரை சேகரிக்க கிராம மக்கள் ஹஸாரேவின் பின்னால் அணி திரண்டனர். காந்தீய வழி மூலமாக ஹஸாரேயின் பயணம் ஊழலுக்கெதிரான சூறாவளியாக மாறியபொழுது அதிகார வர்க்கம் ஆட்டங்கண்டது.
கடந்த முப்பது ஆண்டுகாலமாக மஹாராஷ்ட்ராவில் ஊழல்வாதிகளின் உறக்கத்தை கெடுக்க ஹஸாரேவால் முடிந்தது. சிவசேனா-பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றின் தலைமையிலான அரசுகளிலிருந்து ஊழல்வாதிகளான பல அமைச்சர்களும் ராஜினாமாச் செய்ய ஹஸாரேவின் தலையீடு உறுதுணையானது.
ரலேகான் சித்தி கிராமத்தில் யாதவ் பாபா கோயிலுக்கு அருகே ஒரு சிறிய அறையில் வசித்துவருகிறார் ஹஸாரே. திருமணம் முடிந்த இரண்டு சகோதரிகள் மட்டுமே அவருடைய குடும்ப உறுப்பினர்கள். அவருடைய தாயார் 2002-ஆம் ஆண்டு மரணித்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் ஹஸாரேவுக்கு புதியதல்ல. 1990-களில் அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு மாநில அமைச்சர்களின் பதவியை பறிக்க வைத்தது. ஹஸாரே ஊழல்வாதிகள் என பகிரங்கமாக கூறிய இரண்டு அமைச்சர்களை பா.ஜ.க-சிவசேனா அரசு வெளியேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.
2003-ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் அரசில் நான்கு அமைச்சர்களை பதவி விலகக்கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டுவரவும் அவர் பிரச்சாரம் செய்தார்.
ஊழலுக்கெதிரான போராட்டம் அவருக்கு ஏராளமான எதிரிகளை பெற்றுத் தந்துள்ளது. மகசேசே விருதுபெற்ற அன்னா ஹஸாரேவை கொலைச் செய்ய இரண்டு வாடகை கொலையாளிகளை நியமித்த சம்பவம் 2009-ஆம் ஆண்டு வெளியானது.
காங்கிரஸ் தலைவர் பவன் ராஜே நிம்பல்கரை கொலைச் செய்த வழக்கில் கைதான இரண்டுபேர் இதனை ஒப்புக்கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment