புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அளவுக்குப் பணத்தைப் போடுபவர் சாதாரண இந்தியராக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, நம்பிக்கை இழக்காமலிருங்கள், பட்டியல் நிச்சயம் வெளியிடப்படும் என்றார். இருப்பினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தவிர வேறு எவரும் பணத்தை முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். ஊழல் முறைகேடுகளை விட மோசமானது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைப்பது என அஸாஞ்ச் குறிப்பிட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment