இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் நேட்டோ ராணுவம் நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையில் நடைபெறும் போராட்டம் வலுவடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடரும் நேட்டோ படையினருக்கு பாகிஸ்தான் எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கக்கோரி வடமேற்கு பாகிஸ்தானில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தடையை ஏற்படுத்தியுள்ளனர். நேட்டோ படையினருக்கான 70 சதவீத பொருட்களும் பாகிஸ்தான் மூலமாகத்தான் ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கைபர் பாஸில் தினந்தோறும் முன்னூறு டாங்கர்கள் ஆப்கானிற்கு செல்கின்றன. பலூசிஸ்தானிலிருந்து இதே அளவிலான டாங்கர்கள் ஆப்கானிற்கு செல்கின்றன. தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம் போராட்டத்தை துவக்கினார்.
தர்ணா போராட்டத்தில் பங்கேற்க பெஷாவருக்கு வருகை தந்த 3 ஆயிரம் பேரை வரவேற்ற இம்ரான்கான், தங்களது சகோதரர்களை கொலைஸ் செய்வதை நிறுத்தும் வரை போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்துள்ளார். ”அமெரிக்காவின் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் துவக்கம் இது” பாகிஸ்தான் மக்கள் விழித்தெழுந்துள்ளார்கள். ஊழல்வாதிகளான தலைவர்களையோ, அவர்களின் அமெரிக்க எஜமானர்களையோ நாட்டில் வசிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்-இம்ரான் கான் கூறுகிறார்.அரசுக்காக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார் என இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடாவடி அக்கிரம ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிராக போராட்டம் பாகிஸ்தானில் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பாஷா அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். ஆளில்லா விமானத்தாக்குதலை நிறுத்திவைக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment