ஸன்ஆ:அரபு நாடுகள் முன்வைத்த ஒப்பந்தத்தின் படி 30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார். 32 வருடங்களாக பதவியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசுக்கெதிராக நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மேலும் இரத்தக்களரியை தடுப்பதற்கான முயற்சிதான் இது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு நாடுகள் அடங்கும் ஜி.சி.சி தயாரித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு 30 தினங்களுக்குள் ஸாலிஹ் பதவி விலகி அதிகாரத்தை துணை அதிபர் அப்துற்றாபு மனூர்ஹாதியிடம் ஒப்படைக்கவேண்டும். இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தும் வரை இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்க எதிர்கட்சியிலிருந்து ஒருவரை ஸாலிஹ் நியமிக்க வேண்டும்.
குற்ற விசாரணையிலிருந்து ஸாலிஹ் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒப்பந்தத்தில் உள்ளது. ஸாலிஹின் முடிவை வரவேற்ற அமெரிக்கா, அமைதியான முறையில் அதிகார ஒப்படைப்பு விரைவில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், ஸாலிஹை குற்ற விசாரணையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சியினர் நிராகரித்துவிட்டனர். இத்தகைய ஒப்பந்தத்தை அங்கீகரிக்க இயலாது என எதிர்கட்சி தலைவரும் ஸன்ஆ பல்கலைக் கழகத்தில் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் அப்துல்மாலிக் அல் யூசுஃபி தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான தந்திரம்தான் இந்த் ஒப்பந்தம் என தாஇஸில் எதிர்கட்சி தலைவர் அஹ்மத் அல் வாஃபி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிபரின் முடிவை வரவேற்றுள்ள இன்னொரு எதிர்கட்சி தலைவர் யாஸீன் நுஃமான் தேசிய ஐக்கிய அரசில் சேரமாட்டோம் என தெரிவித்தார்.
அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் யெமன் அதிபர் பதவியை ராஜினாமாச்செய்தால் அரபுலகில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் காரணமாக பதவியிலிருந்து விலகிய துனீசியாவின் ஜைனுல் ஆபிதீன் பின் அலி, எகிப்தின் ஹுஸ்னி முபாரக் ஆகியோரின் பட்டியலில் இடம்பெறுவார்
0 கருத்துரைகள்:
Post a Comment