28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் மட்டுமின்றி ஏராளமான பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மத்திய அரசு, பல்வேறு மாநில அரசுகள் ஆகியவை பரிசுகளை அறிவித்து வருகின்றன.
ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி:
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி வழங்குகிறது பிசிசிஐ.
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சமும், தேர்வுக்குழுவினருக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்துள்ளார்.
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சமும், தேர்வுக்குழுவினருக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்துள்ளார்.
சச்சின், ஜாகீர்கானுக்கு ரூ.1 கோடி
மகாராஷ்டிர வீரர்கள் சச்சின், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அம் மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண் அறிவித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
சேவாக், நெஹ்ரா ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு விருது வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே பாஸ்
இந்திய வீரர்களுக்கு ஆயுள்காலம் முழுவதும் இலவசமாக ரயிலில் (ஏ.சி. முதல் வகுப்பு) பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டோனிக்கு ரூ. 2 கோடி
கேப்டன் டோனிக்கு ரூ.2 கோடியும், டில்லி வீரர்களான சேவாக், கம்பீர், நெஹ்ரா, கோலி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்படும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
யுவராஜுக்கு “ஆடி’ கார்
உலகக் கோப்பையில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதுபெற்ற அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜுக்கு காரை பரிசாக வழங்குகிறது சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம். கார் விரைவில் யுவராஜிடம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடி காரைப் பரிசாக இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ். இதற்கு முன் 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியபோது, அப்போதைய சகலதுறை ஆட்டக்காரர் ரவி சாஸ்திரிக்கு ஆடி கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் வீட்டுமனை
இந்திய வீரர்கள் அனைவருக்கும் பெங்களூர் பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வீட்டுமனை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சாலை ஒன்றுக்கு தோனியின் பெயரை சூட்டவுள்ளதாக மேயர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
டோனி பெயரில் மைதானம்
உத்தரகண்டில் கேப்டன் டோனி, சச்சின் ஆகியோருக்கு வீடு அல்லது வீட்டுமனை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். டோனி பெயரில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது.
ஜார்க்கண்டில் நிலம்
இந்திய கேப்டன் டோனிக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் நிலம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவில் பதவி உயர்வு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ் தெரிவித்தார்.
ஆனால் பதவி உயர்வு குறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
டோனி ராஞ்சியில் ஏர் இந்தியா அலுவலகத்தில் துணை மேலாளராக உள்ளார். அவருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படலாம். யுவராஜ் சிங் சண்டீகர் அலுவலகத்தில் மேலாளராக உள்ளதால், முதுநிலை மேலாளராக பதவி உயர்வு பெறக்கூடும். துணை மேலாளராக உள்ள ஹர்பஜன் (அமிருதசரஸ்), ரெய்னா (டில்லி) ஆகியோருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
முனாப், பதானுக்கு விருது
குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான இகல்வயா விருது வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
வீரர்களுக்கு நிலம்
கோப்பையை வென்ற இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 300 சதுர அடி நிலம் வழங்குவதாக ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூபட் போடார் தெரிவித்துள்ளார்.
ரெய்னா, சாவ்லாவுக்கு விருது
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவிய உத்தரப் பிரதேச வீரர்கள் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லாவுக்கு கன்ஷிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதற்கும், கோப்பையை வென்றதற்கு ரெய்னா, சாவ்லாவின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களால் உத்தரப் பிரதேசமே பெருமையடைகிறது என மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமின்றி, வரும் காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடுவதற்கு உதவும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment