Monday, April 4, 2011

ஒரு தாயின் விடைத்தெரியாத வினாக்கள்

safia1
கண்ணூர் மைதானப்பிள்ளில் என்ற வீட்டில் இமைகளில் கண்ணீர் வற்றாத ஒரு தாய் வசிக்கிறார்.மகனின் இறந்த உடலை கூட பார்க்கமாட்டேன் எனக்கூறி செய்திகளில் இடம்பிடித்த அந்த தாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு -’தேச துரோகியான எனது மகனின் இறந்த உடலை காணவிரும்பவில்லை எனக்கூறிய ஒரு தாயின் நாடுதான் இது’ என்ற வாசகத்துடன் இந்த தாயின் சித்திரம் கேரள மாநிலத்தின் சுவர்களில் இடம்பிடித்திருந்தது.கஷ்மீரில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஃபயாஸ் என்ற இளைஞரின் அன்னையான ஸஃபியாதான் அந்த தாய்.சிரமத்துடன் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்த மகனின் இறந்த உடலைக்கூட பார்க்கமாட்டேன் என இந்த தாயைக்கொண்டு கூறவைத்தது யார்?நெஞ்சில் கனன்றுக்கொண்டிருக்கும் நெருப்பை தனது கண்ணீரால் அணைக்க முயன்றுக்கொண்டிருக்கும் ஸஃபியா உம்மா தனது உள்ளத்தை திறக்கிறார்.
எனது மகனை தேசத்துரோகியாக மாற்றியது யார்?
”எனது மகன் தேசத்துரோகியாக இருந்தால் எனக்கு அவனை காணதேவையில்லை.இல்லாவிட்டால் எனக்கு அவன் தேவை.எல்லோரும் தீவிரவாதி என அறுதியிட்டு கூறியபொழுது நானும், அவனுடைய இறந்த உடலை காணமாட்டேன் எனக்கூறியது உண்மைதான்.தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்ட ஒரு இளைஞனின் இறந்த உடலை வீட்டில் கொண்டுவந்தால் ஊரில் பிரச்சனைகள் ஏற்படும் என பலரிடமிருந்தும் எனக்கு நிர்பந்தம் உருவானது. எனது மகனின் உடல் கூட நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சனையாக மாறிவிடும் என சிலர் என்னை அச்சுறுத்தினர்.அவ்வாறு உருவாகி விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.இக்காரணத்தினால் மட்டுமே எனது மகனை கடைசியாக ஒருமுறை காணவேண்டாம் என உள்ளத்தை திடப்படுத்திக்கொண்டு நான் தீர்மானித்தேன்.” எனக்கூறுகிறார் ஸஃபியா.
ஆனால், இந்த தாயின் மனதில் விடைதெரியாத சில வினாக்கள் உள்ளன.ஒரு போதும் விடை தெரிந்துவிடக்கூடாது என்ற யாரோ சிலரின் நிர்பந்தம் இந்த வினாக்களின் பின்னணியில் உள்ளது.
”இஸ்லாத்தில் பெரிய அளவில் ஈடுபாடும் ஏதுமில்லாத ஒரு சாதாரண  இளைஞனால் தீவிரவாதியாகவும், தேசத்துரோகியாகவும் மாற 22 தினங்கள் போதுமா?எனக்கு தெரியவில்லை.21 வயது வரை நான் அவனை வளர்த்தேன்.படிப்பதற்கோ, வேலை பார்ப்பதற்கோ அவனுக்கு விருப்பமில்லை.நான் அவனை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை.எவரும் அவனை குறித்து எவ்வித குறையும் கூறியதில்லை.ஒரு நாள் எனது மகனை ஒரு சங்கிலித்திருட்டு வழக்கில் போலீஸ்  அவனது நண்பனுடன்  கைதுச்செய்தது.அவனது நண்பனைக்குறித்து ஊரில் நல்ல அபிப்ராயம் கிடையாது.ஆனால், எனது மகனைக்குறித்து எவரும் குற்றங்கூறியதுமில்லை.ஆனாலும், அவன் இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்டான்.
பின்னர் ஒரு நாள் ஃபைஸல் என்ற எனது மகனின் நண்பன்,  அவனை ஓர் இடம் வரை செல்லவேண்டும் எனக்கூறி அழைத்துச்சென்றான்.யார் வந்து அழைத்தாலும் அவர்களுடன் ஃபயாஸ் செல்வது வழக்கம்.அதுபோலத்தான் ஃபைஸலுடன் எனது மகன் சென்றான்.பின்னர் அவனைப்பற்றி எந்த விபரமும் இல்லை.அவனது ஒரே சகோதரி, பலமுறை மொபைலில் அவனை தொடர்புக்கொள்ள முயற்சித்தபோதும் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
வேதனையை விட கொடியது பயம்..
அவன் ஃபைஸலுடன் சென்று 22-வது நாள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசும், வெடிக்குண்டு நிபுணர்களும் எனது வீட்டிற்குள் திடுதிப்பென்று நுழைந்தனர்.சமையலறையிலும், அறைகளிலும் சோதனை போட்டனர்.துணிகளையெல்லாம் கலைத்துப்போட்டு சல்லடையாக தேடினர்.ஒன்றும் கிடைக்கவில்லை.என்ன காரணம்? என வினவியபோது அவர்கள், எனது மகன் தீவிரவாதச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்கள்.பின்னர் தொலைக்காட்சியில் நான் கண்டது , எடக்காடு ரிக்ரூட்மெண்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட மைதானபிள்ளில் ஃபயாஸ் உட்பட நான்கு பேர் கஷ்மீரில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
”மகனின் மரணத்தில் வேதனையை விட பயம்தான் எனக்கு ஏற்பட்டது.தேசத்துரோகியின் தாய் என அழைக்கப்படுவது பெரிய வேதனையல்லவா?நாட்டுமக்களும், தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிகையாளர்களும் தீவிரவாதியின் தாயை காணவந்தனர்.உங்கள் மகனின் இறந்த உடலை காணத்தான் வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.அஞ்சவேண்டாம்.எல்லா உதவிகளையும் வழங்குவதாக போலீஸ் கூறியது.ஆனால், எனது மகனின் இறந்த உடலை நான் பார்ப்பதுமூலம் நாட்டில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை உருவாகிவிடக்கூடாது என எண்ணினேன்.ஆம்.எனது மகன் தேசத்துரோகியானால் நான் அவனது உடலை காணவிரும்பவில்லை என உள்ளம் உருக்குலைந்து கூறினேன்.பின்னர் இது செய்தியாக மாறிவிட்டது”
பின்னர் என்ன நடந்தது? எனது பெரிய புகைப்படம் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டது.”இது தீவிரவாதிகளின் நாடல்ல.தேசத்துரோகியான மகனின் உடலை பார்க்கமாட்டேன் என கூறிய தாயின் நாடு இது”-இவ்வாறு வெவ்வேறான வாசகங்களை தேர்தல் நேரங்களில் எழுதிவைத்தனர்.தீவிரவாதி என்றால் என்ன? என்பதுகூட எனக்குத்தெரியாது-ஸஃபியா தனது நெஞ்சில் கைவைத்து அப்பாவித்தனமாக கூறுகிறார்.ஒரு தாயின் நெஞ்சில் கனன்றுக்கொண்டிருக்கும் இந்த வார்த்தைகள் தேர்தல் விவாதங்களில் சூட்டை கிளப்பியது.முஸ்லிம் சமுதாயத்தின் குரல்தான் இந்த தாயின் குரல் என முஸ்லிம் லீகின் தலைவர் கூட பேட்டியளித்தார்.சீராட்டி வளர்த்த மகனின் இறந்த உடலைக்கூட காணமாட்டேன் என அஞ்சி நடுங்கிக்கூறிய இந்த அபலை தாயின் குரலா முஸ்லிம் சமுதாயத்தின் குரல்? என்ற சந்தேகம் பலரின் உள்ளங்களில் எழுந்தாலும் பலரும் இந்த தாய்க்காக அமைதி காத்தனர்.
மரணச்சான்றிதழ் எங்கே?
”இப்பொழுது விசாரணையெல்லாம் நடக்கிறது.ஆனால், அவனது மரணச்சான்றிதழ் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.டெல்லியிலிருந்து விசாரணைக்கு வந்த போலீசாரிடம் வினவியபோது, கஷ்மீரில் நிறையபேர் இதைப்போல் மரணிக்கின்றார்கள்.ஆதலால் சான்றிதழ் ஒன்றும் கிடைக்காது எனக்கூறினார்கள்.மரண சான்றிதழ் கிடைத்தால்தான் நான் ஃபயாஸிற்கு சங்கிலித்திருட்டு வழக்கில் போலீஸ் ஸ்டேசனில் கட்டிய ரூ.10 ஆயிரம் ஜாமீன் தொகை திரும்ப கிடைக்கும்.நீங்கள் இதனை பத்திரிகையில் வெளியிடுவீர்களா?” -கள்ளங்கபடமில்லாத அந்த தாய் கேட்கிறார்.
பத்திரிகைகளில் வந்த செய்தியைத்தவிர இந்த தாய்க்கு மகனைக்குறித்து வேறொன்றும் தெரியாது.2008 அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி கஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட கண்ணூர் ஃபயாஸ், ஃபாயிஸ், அப்துல் ரஹீம், முஹம்மது யாஸீன் ஆகியோர் இவ்வழக்கில்  7 முதல் 10 வரையிலான குற்றவாளிகள் என செய்தி வெளியானது.
பெற்ற தாயாக யாரும் என்னை பார்க்கவில்லை..
‘இந்த தீவிரவாதிகளுக்கெல்லாம் நிறைய பணம் கிடைக்கிறது என பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.ஆனால், எனது மகனிடம் ஒரு காசு கூட கிடையாது.அவனை திருட்டு வழக்கில் ஜாமீனில் விடுவிக்க நான் கட்டிய ரூ.10000 கிடைத்தால் எனது கடன்களை தீர்ப்பேன்.எல்லா தாய்மார்களையும் போலத்தான் நானும் எனது மகனை பெரிய நம்பிக்கையுடன் வளர்த்தேன்.அவன் எனக்கு ஒரே மகன்.அவனது இறந்த உடலைக்கூட காணமாட்டேன் என நான் கூறியபொழுது என இதயம் சுக்கு நூறாக உடைந்துபோனது உங்களுக்கு தெரியுமா?அன்றைக்கு எனக்கு ஆறுதல் கூற எவருமில்லை.எல்லோரும் தீவிரவாதியின் தாயாகத்தான் என்னை பார்த்தார்கள்.ஒரு பெற்றத்தாயாக என்னை எவரும் பார்க்கவில்லை.-ஸஃபியா கூறுகிறார்.
”எனது மகன் இறந்துவிட்டான் என்பதற்கு போலீஸ் ஆதாரமாக காட்டியது அவனது ஒரு புகைப்படமாகும். 22 தினங்களுக்கு முன்பு அவன் வீட்டிலிருந்து கிளம்பியவேளையில் இருந்த தோற்றம் அல்ல அது.கஷ்மீரில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குண்டடிபட்டு இறந்து கிடக்கும் காட்சி என்று கூறித்தான் போலீசார் அந்த புகைப்படத்தை என்னிடம் காட்டினர்.பாகிஸ்தானிகள் அணியும் நீண்ட ஆடையை அவன் அணிந்திருந்தான்.முகத்தில் இரத்த கறைகள் படிந்திருந்தன.
கையில் ஒரு துப்பாக்கியுடன் அவன் இறந்து கிடந்தான்.புகைப்படம் அவனுடையது என்பது உண்மைதான்.இந்த துப்பாக்கியால் ராணுவத்தினரை சுடுவதற்கு 22 தினங்களில் அவன் கற்றுக்கொண்டானா?அவனுக்கு என்ன நடந்தது?அவனை அழைத்துச்சென்ற ஃபைஸலிடம் விசாரித்தால் எனது மகன் எங்கு சென்றான் என்பது தெரியுமல்லவா?இவர்களுடன் சேர்ந்து கஷ்மீரில் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு தப்பித்த ஜப்பார் என்னக்கூறுகிறார்?எனது மகன் ஏதேனும் சதி வலையில் சிக்கினானா  என்பது ஜப்பாருக்கு தெரியுமா?எனது மகனைப்போல ஏராளமான இளைஞர்கள் இவ்வாறு கொல்லப்படுகின்றார்களா?அவ்வாறெனில் எல்லா தாயார்களும் என்னைப்போல் நெருப்பை நெஞ்சில் சுமந்துக்கொண்டுதானே வாழ்வார்கள்?அல்லது எனது மகன் உயிரோடி இருக்கின்றானா?இந்த உலகில் எங்கேயாவது அவன் உயிரோடு இருந்தால்…?எனக்கு இப்பொழுது ஒரு மகள் மட்டுமே.பிள்ளைகளின் வாப்பாவும் இறந்துவிட்டார்.
ஸஃபியாவின் கேள்விகளுக்கு பதில் உண்டா?இந்த நாட்டில் எத்தனை ஸஃபியாக்கள் இத்தகைய கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்?இவர்களெல்லாம் யாரிடம் சென்று தனது மனக்குமறல்களை வெளிப்படுத்துவார்கள்?

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza