சென்னை:வருகின்ற தமிழக-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அவ்வியக்கத்தின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச்செய்ய பாடுபடுவது, வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது, உலமா வாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்க பாடுபடுவது, முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் துவங்க வட்டி இல்லா கடன் கிடைக்க பாடுபடுவது, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் சமூகம், பழங்குடியின மக்கள் மற்றும் மீனவ சமூக நலனை பாதுகாக்க பாடுபடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சக்திப்படுத்த தமிழக தேர்தலில் களமிறங்கியிருக்கும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) போட்டியிடும் 8 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை வழங்குகிறது.
இதனடிப்படையில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகளான துறைமுகம், தொண்டாமுத்துர், திருப்பூர் தெற்கு, பூம்புகார், ராமநாதபுரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் புதுவையில் நிரவி திருப்பட்டினம் ஆகிய 8 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்கி பணியாற்ற முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் பாடுபடும் மனித நேய மக்கள் கட்சி(ம.ம.க) போட்டியிடும் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் முழு ஆதரவு வழங்க முடிவுச்செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக பல வருடங்களாக அயராது பாடு பட்டுவரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீஃப் அவர்கள் போட்டியிடும் தொகுதியான அறந்தாங்கியில் முழு ஆதரவு வழங்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 11 தொகுதிகளைத்தவிர இதர இடங்களில் சிறூபான்மை மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன் மீது அக்கறையுள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதர வாஞ்சையுடன் பழகி, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே வகுப்பு வாதத்தை தூண்டி, அவர்களிடையே மத துவேசத்தை வளர்த்து, அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.கவுக்கு எதிராக, குறிப்பிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்து, அவர்களின் உண்மை முகமான பாசிசத்தையும், ஊழல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இரட்டை நிலையையும் மக்களிடையே தோலுரித்து காட்டுவது என முடிவுச் செய்யப்பட்டது.
ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் பா.ஜ.கவை புறக்கணித்துவிட்ட்டனர் என்பதை கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் பறைசாற்றிவிட்டன. தமிழகத்தில் தனது முகவரியை இழந்து நிற்கும் பா.ஜ.கவை மக்கள் இத்தேர்தலிலும் புறக்கணிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய முடிவுச் செய்யப்பட்டது. மத துவேச கட்சியான பாரதீய ஜனதா கட்சியை புறக்கணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.
மக்கள் அனைவரும் ஓட்டுரிமை என்ற தங்களது மிக முக்கியமான ஜனநாயக கடமையை முறையாக பயன்படுத்தி நல்லதொரு ஆட்சி மலர பாடுபடவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.’
0 கருத்துரைகள்:
Post a Comment