
சென்னை:தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சியாளரை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.இதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு வாக்களித்தனர். அசம்பாவிதங்களோ, வன்முறைச் சம்பவங்களோ இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவானதாக தெரியவந்துள்ளது.
நேற்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. சில ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டளித்தனர். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக ம.தி.மு.க., அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார்.
மாநில காவல்துறையோடு இணைந்து, துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பதட்டமான தொகுதிகள் என, அடையாளம் காட்டப்பட்டு இருந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறும்போது, “தமிழகம் முழுவதும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான புகார்கள் ஏதும் வரவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு அளித்தனர்” என்றார்.
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் 82 சதவீதம் வாக்குப் பதிவாகின. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 66 சதவீதமும், ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 73 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் 81.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் 65 சதவீதம் ஓட்டு பதிவானது.

0 கருத்துரைகள்:
Post a Comment